திலீபன்:தடை அதனை உடை!திலீபனின் நினைவேந்தலை தடுத்து விட இலங்கை அரசு மும்முரமாக உள்ள நிலையில் தமிழ் கட்சிகளது உண்ணாவிரத போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று இடமொன்றில் போராட்டத்தை நாளை காலையில் ஆரம்பிப்பதென தமிழ் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாளைய தினம் தொண்டமனாறு செல்வ சந்நிதி ஆலயத்தில் முன்னெடுக்கப்படவிருந்த உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை காவல் துறை நீதிமன்ற படியேறி தடை பெற்றுள்ளது.

நல்லூரில் நினைவேந்தலினை முன்னெடுக்க யாழ்.நீதிவான் நீதிமன்று தடை விதித்திருந்த நிலையில் நாளை செல்வ சந்நிதி ஆலய முன்றலில் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கெதிராக கொழும்பு தலைமை உத்தரவின் பேரில் வல்வெட்டித்துறை காவல்துறை பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெற்றுள்ளது.

எனினும் பருத்தித்துறை நீதிவானின் கட்டளையில் பிரதிவாதிகளாக யாரையும் குறிப்பிடவில்லையென்ற போதும், நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து- நீதிமன்ற கட்டளையை மீறாமல்- திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று மாலை ஒன்று கூடி நின்ற மாணவர்கள் திலீபனின் நினைவேந்தலுக்கு ஆயத்தமாகின்றனரென்ற தகவல் அடிப்படையில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.

பதிலுக்கு காவல்துறை குவிக்கப்படும் தகவல் அறிந்து மாணளவர்களும் குவிந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் சில மணி நேரம் தர்க்கம் ஏற்ப்பட்டது. தொடர்ந்து மாணவர்களை கலைந்து செல்லுமாறு இலங்கை காவல்துறை அச்சுறுத்தியது.நீண்ட இழுபறிக்கு பின்னர் யாழ். பல்கைலைக்கழக துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கு இணங்கி மாணவர்கள் வெளியேறியிருந்தனர்.


No comments