இதுவும் இனத்தின் கட்டமைப்பை சீரழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையா? - மு.தமிழ்ச்செல்வன்

அத்திபாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் பலமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இவ்வாறுதான் ஒரு இனம் அல்லது சமூககத்தின் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் அச்சமூகத்தின், இனத்தின் இளம் சமூகம் பலமாக இருக்க வேண்டும். ஒரு இனத்தின் இளம் சமூகத்தை சீரழித்துவிட்டால் போதும் அந்த இனம் எதிர்காலத்தில் அடையாளம் இன்றி, சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.

இப்போது இங்கே விடயத்திற்கு வரும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அதிலும் 2015 க்கு பின்னர் வடக்கில் அதிகரித்த போதைப் பொருள் பாவனை காணப்படுகிறது. கஞ்சா கசிப்பு என்று ஆரம்பித்த போதைப்பொருள் தற்போது ஹேரோயின் ஐஸ் என மாறியிருக்கிறது. முன்னர் தெற்கிலிருந்து நாட்டின் ஏனை பகுதிகளுக்கு போதை பொருள் கடத்தப்பட்டது. ஆனால் தற்போது வடக்கிலிருந்தே நாட்டின் ஏனைய பாகங்களுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருகிறது வடக்கின் கிழக்கு கடற்கரையோரம் இதன் பிரதான தளமாக காணப்படுகிறது.

இங்கே மிக முக்கியமான விடயம் இந்த போதைப்பொருள் பாவனையை அதிகரிக்க போதைப்பொருள் வியாபாரிகளால் இலக்கு வைக்கப்படுகின்றவர் தமிழ் இளம் சமூகமே அதிலும் மாணவர்கள் அதிலும் தரம் ஒன்பது தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களே. என்றுமில்லாத அளவுக்கு இளம் வடக்கின்; இளம் சமூகம் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாகியுள்ளது. மிகவும் அதிர்ச்சி தரும் செய்திகளாகும். இது திட்டமிட்டு இனத்தின் இருப்பை அல்லது கட்டமைப்பை சீரழிக்க திட்டமிட்டு செயற்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரலா என்பதும் சந்தேகமே.

இந்தப் போதைப் பொருள் பாவனை வடக்கில் குறிப்பாக இளம் சமூகத்தின் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது. என்பதனை இனி நோக்குவோம்.

ஆரம்ப காலங்களில் சுமார் 1900 க்கு முன்னர் பெண்கள் புகைப்பது மிக மிக அரிதாக இருந்தது. பெண்கள் புகைப்பதே இல்லை என்று கூட சொல்ல முடியும் எனவேபெண்களிடம் புகைப்பழகத்தை ஏற்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் ஒரு பேராசிரியரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கின்றார்கள்.

அந்தப் பேராசிரியர் இப்படியொரு ஆலோசனையை வழங்கியிருகின்றார் ஆதாவது பெண்களுக்கு சமவுரிமை இல்லை என்றும் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு ஆர்ப்பாட்த்தை ஏற்பாடு செய்யுமமாறும் அப்போது தெரிவு செய்யப்பட்ட சில பெண்களிடம் சிகரட்டை கொடுத்து அவர்களை புகைக்க செர்லலியும் அதனை ஊடகங்களில் வரும் வண்ணம் பார்த்துக்கொள்ளவும் என்று.

பெண்களின் ஒடுக்குமுறைக்களுக்கு எதிராக ஆர்;ப்பாட்டமும் நடந்தது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை சிகரட் பிடிக்கும் பெண்களின் படமும் வெளிவந்தது. இதன் பின்னரே படிப்படியாக பெண்களும் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானர்கள். இன்று அதிகளவில் பெண்கள் புகைப்பிடிக்கும் பழகத்திற்கு சென்றமைக்கு மேற்படி இந் நிகழ்வே வித்திட்டது என்றுக் கூறப்படுகிறது.

இவ்வாறுதான் இன்று இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மாணவர்களை இலக்கு வைக்கின்றனர்.இதற்காக இவர்களை சில உத்திகளையும் கையாள்கின்றனர். இந்த உத்திகள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகள் போன்று காணப்படும். இதனால் மாணவர்கள் இலகுவில் போதைபொருள் பாவனைக்குள் சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிகள் வெற்றியும் பெறுகின்றனர். சமீபகாலமமாக வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு,யாழ்ப்பாண மாவட்டங்களில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி தருபவையாகவுள்ளன.

போதைப்பொருள் வியாபாரிகளின் உத்திகள்

போதைப்பொருள் வியாபாரிகள் நன்கு திட்டமிட்டு, இலக்கு தவறாத வகையில் போதைப்பொருளுக்கு மாணவர்களை அடிமையாக்குகின்றனர். கிளிநொச்சியிலும் அதுவே இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் முன்னிலையில் உள்ளது, அதிகளவு பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்கின்ற மாவட்டம், பெற்றோர்கள் அல்லது தந்தை அல்லது தாயை இழந்த பிள்ளைகள் கனிசமான அளவினர் வாழ்கின்ற மாவட்டம், உள நெருக்கடி மிக்கவர்கள் அதிகமுள்ள மாவட்டம், தொழில் அற்ற இளம் சமூகம் அதிகமுள்ள மாவட்டம், பல குடும்பங்களில் குடும்ப உறவுகள் சீர்முகுலைந்துள்ளன. எனவே இதுவே போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு காரணமாகவுள்ளது.

மேற்படி நிலைமைகளில் உள்ள குடும்பங்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்திற்கு அவர்களை ஈடுப்படுத்துகின்றனர். இதில் முக்கியமாக தொழிலின்றி இருக்கும் இளைஞர்களிடம் வருமான ஆசையினை காட்டி கடின உழைப்பு இன்றி ஆயிரக்கணக்கில் உழைக்க முடியும் ஆதாவது அதிகளவில் உழைக்க முடியும் குறுகிய காலத்தில் பணக்காரனாக மாறிவிடலாம் எனக் கூறி அவர்களை போதை பொருள் விற்பனையில் வீழ்த்துகின்றனர். அத்தோடு முதலில் இவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்குகின்றனர். அதிலிருந்து அவர்கள் மீள முடியாத நிலை ஏற்பட்டு போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் இல்லாத நிலை ஏற்படும் போது பாவனையாளர்களை வியாபாரிகளாக மாற்றுகின்றனர் இதன் போது அவர்களிடம் கூறப்படுவது விற்பனை மூலம் வரும் பணத்தில் உனக்குத் தேவையான போதை பொருளையும் வாங்கிக்கொள் என்பதே. எனவே ஒருவர் அதன் பின்னர் விற்பனையாளராகவும், பாவனையாளராகவும் மாறுவதோடு, அதிக வருமானத்தை உழைக்க புதிய பாவனையாளர்களுக்கு வலை வீசுகின்றார்.

இதில் ஆபத்தானது மாணவர்கள் இலக்கு வைக்கப்படும் முறையே மாணவர்களிடையே நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், விளையாட்டுகளில் சிறப்பாக செயற்படும் மாணவர்கள் ஆகியோரே இலக்கு வைக்கப்படுகின்றனர். இவர்களிடம் அவர்கள் தெரிவிப்பது. 'குடு( ஹெரோயின்) பாவித்துவிட்டு உயர்தர கணித வகுப்பில் இருந்தால் எந்த கணக்கையும் இலுகுவாக செய்ய முடியும்' 'மூளை எப்பொழுதும் புத்துணர்ச்சியோடு இருப்பதனால் நன்றாக படிக்க முடியும்' பாடசாலைகளில் இடம்பெறுகின்ற விளையாட்டுகளில் சிறப்பாக செயற்பட முடியும். போன்ற ஆசை வார்த்தைகளை கூறி பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், விளையாட்டில் சிறப்பாக செயற்படுகின்ற மாணவர்களை இலக்கு வைக்கின்றனர். இதற்காக மாணவர்களின் குடும்ப பின்னணி கூட ஆராயப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் நடந்தது என்ன?

கிளிநொச்சி கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை இரண்டு பிரபல பாடசாலைகளை சேர்ந்த கணிதம் மற்றும் உயிரியல் பிரிவில் கற்கும் நான்கு மாணவர்கள் ஒரு தனியார் கல்வி நிலையம் வகுப்பு நிறைவுற்றதும அதே வீதியில் வைத்து கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவரிடம் ( அவர் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது) 5000 ரூபா பணத்தை கொடுத்து 80 மில்லிக் கிராம் குடுவை (ஹெரோயின்) வாங்கியிருகின்றார்கள். வாங்கியவர்கள் அங்கிருந்து மத்திய ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு இன்றுவரை பயன்படுத்தபடாதுள்ள மலசலக் கூடத்திற்கு ஒதுங்கியுள்ளனர்.

விசேட பொலீஸ் பிரிவால் கைது

இந்த நான்கு மாணவர்களும் குறித்த மலசல கூடத்தை அடைந்து சில நிமிடங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிபொலீஸ் மா அதிபரின் விசேட பொலீஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலீஸ் அதிகாரி சத்துரங்க தலைமையில் குறித்த இடத்திற்கு பொலீஸார் விரைந்து சென்று 80 மில்லிக் கிராம் குடுவுடன் மாணவர்களை கைது செய்து கிளிநொச்சி பொலீஸாரிம் ஒப்படைந்தனர். பின்னர் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் குடும்ப பின்னணி

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் 2020 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஒருவர் 18 வயதும் ஏனையவர்களுக்கு 19 வயது. இவர்களில் ஒரு மாணவனை தவிர ஏனையவர்களின் பெறுபேறுகள் 7ஏ,8ஏ, என காணப்படுகிறது. மற்றவரின் பெறுபேறும் இவ்வாறு இல்லை எனில் நல்ல பெறுபேற்றைக்கொண்ட மாணவன் அவர். அவர் உயிரியல் பிரிவில் கல்வி கற்கின்றான்.

இந்த மாணவர்களில் ஒருவரின் தந்தை பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர், தந்;தையின் குடும்ப வழி கல்வித்துறையில் மாகாண மட்டத்தில் உயரதிகாரிகள் தொடக்கம் பிரபல ஆசிரியர்கள். மற்றொரு மாணவனின் தந்தை பிரபல வர்த்தகர், இன்னொரு மாணவனின் தந்தை மலேசியாவில் பணியாற்றுகின்றார். மற்றமாணவனின் தந்தை கொழும்பில் தொலைக்காட்சி திருத்தும் தொழிநுட்ப பணியில் இருக்கின்றார்.

ஒருவருடைய சகோதரன் யாழ் பல்கலைகழக வவுனியா கம்பசில் கல்வி கற்கின்றார். இவ்வாறு நல்ல குடும்ப பின்னணியை கொண்டுள்ளவர்கள்.

இந்த மாணவர்கள் அனைவரும் இயல்பிலேயே கெட்டிக்காரர்கள். பெருளளாதார வசதிப்படைத்தவர்கள். ஆதாவது கையில் காசு புழக்கமுள்ள மாணவர்கள் எனவே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கும் இந்த மாணவர்களே. வகுப்பில் இந்த மாணவர்கள் திறமையாக இருப்பதனை காட்டி அது குடு பாவிப்பதன் மூலமே என்ற மாயையை ஏனைய மாணவர்களிடம் ஏற்படுத்தி அவர்களையும் போதைப் பொருள் பானைக்கு அடிமையாக்கிவிடுதல். இந்த மாயையிலிருந்து மாணவர்கள் வெளிவர முன்னர் அவர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டிருப்பார்கள். அடிமையாக்கப்பட்ட ஒரு மாணவனை பின் அதிலிருந்து மீட்டெடுப்பது மிக மிக கடினமான காரியம். ஆதன் பின்னர் அவனது கல்வி சீரழிந்து அவனது வாழ்க்கையே அழிந்துவிடும்.

இதன் பின்னர் அவனால் போதை இல்லாம் வாழவே முடியாது என்ற நிலை ஏற்படும். போதைப் பொருளை வாங்குவதற்கு அவனது எந்த எல்லைக்கும் செல்வான். பேற்றோர்களிடம் தினமும் பணத்திற்காக சண்டையிடுவான். புணம் கிடைக்காத போது களவு இல்லை எனில் போதைப் பொருள் வியாபாரிகளாக மாற்றப்படுவான். ஒரு கட்டத்தில் அவன் போதைப் பொருளை நுகர்வதற்கு கொலையும் செய்யுமளவுக்குச் செல்வான். இதுவே இன்று அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. கிளிநொச்சியின் 2015 க்கு பின்னரான சூழல் இதற்கு அதிகமதிகம் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

கிளிநொச்சியில் போதைப் பொருள்

கிளிநொச்சி மாவட்டத்தில் எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு கஞ்சா,கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது. கசிப்பு விற்பனையில் தாரளமாக ஆண்கள் பெண்கள் ஈடுபடுகின்றனர். கஞ்சா விற்பனையும் தாரளமாக நடைப்பெற்று வருகிறது. சிறுவர்கள் பெண்கள் முதல் பெருமளமானவர்கள் இதில் ஈடுப்படுகின்றனர்.

அன்மையில் கிளிநொச்சியில் உள்ள சில பாடசாலைகளில் வைத்தியர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கை நடாத்திய பின்னர் மாணவர்களிடம் இருந்து பின்னூட்டல்களை எழுத்து மூலம் பெற்றிருந்தனர்.

அதில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் தங்கள் பாடசாலைகளின் அருகில் உள்ள பெட்டிக் கடைகில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது. என்றும் சில மாணவர்கள் தங்களின் ஊர்களில் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுப்படுகின்றனர் எனவும் அதில் சில பெண்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் கஞ்சா விற்பதாகவும் எழுதியிருந்தனர்.

இதனை தவிர சில மாணவர்கள் தங்களின் தந்தை இடத்தின் பெயரை குறிப்பிட்டு அங்கு சென்று கஞ்சா பெற்று பயன்படுத்துவதாக எழுதியிருந்தனர். அத்தோடு முக்கியமாக பல மாணவர்கள் தங்களின் சக மாணவன் ஆதாவது நண்பன் சிகரட் பிடிக்கின்றான், ஐஸ் போதை பொருள் பாவிக்கின்றான், கஞ்சா பாவிக்கின்றான். எனவும் எழுதியிருந்தனர். 

கஞ்சா பாவிப்பதால்தான் தன்னால் நன்றாக படிக்க முடிகிறது என தனது நண்பன் சொன்னதாக ஒரு மாணவன் எழுதியிருக்கின்றான். இவ்வாறு பல அதிர்ச்சிகரமான பின்னூட்டல்களை மாணவர்கள் எழுதி கொடுத்திருக்கின்றனர்.

இந்த மாணவர்களின் பின்னூட்டல்களிலிருந்து ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது தற்போது மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது என்பதை. எனவே கிளிநொச்சி மாவட்ட நலன்களில் அக்கறையுள்ளவர்கள் பல்துறை சார்ந்து ஒன்றிணைந்து ஒரு விரைவான செயற்றிட்டத்தை இதற்கு எதிராக நடைமுறைப்படுத்த தவறின் மாவட்ட கல்வி மடடும் கடை நிலையில் இருக்காது எல்லாவற்றிலும கடை நிலைக்குச் சென்றுவிடும்.

கிளிநொச்சியில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் சம்மந்தப்பட்டவர்கள் காட்டும் அக்கறையின்மையும், போதைப்பொருள் வியாபாரிகளுடன் இருக்கும் உறவுமே இன்று அதிகரித்த போதைப்பொருள் பாவனைக்கான காரணமாக அமைந்துள்ள என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்படுகின்றவர்களுக்கு அரசியல்வாதிகள் முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்க்ள வரை இருக்கின்ற செல்வாகும் ஒரு பிரதான காரணமாக அமைந்திருகிறது.

பிலிப்ப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபித ரொட்ரிகோ துதெர்த்தே பதவியேற்ற பின்னர் நாட்டை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றுவதற்கு சுமார் 27 ஆயிரம் பேரை தெருத் தெருவாக சுட்டுத் தள்ளினாரோ அவ்வாறான கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இலங்கையை போதையற்ற நாடாக மாற்ற முடியும்.

No comments