வந்தாறுமூலை படுகொலை?


வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவத்தின், 30வது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூறப்பட்டது.

வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டதன் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூறும்முகமாக இன்று(05.09.2020) 10 மணியளவில், மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றதுடன் வந்தாறுமூலை கிருஸ்ணன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்றன.

1990ம் ஆண்டு செப்ட்டம்பர் 05ம் திகதி, யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தவர்களில் 148 பேர் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இதுவரை நீதி கிடைக்கப்பெறாதவர்களாக ஆண்டுதோறும் இச்சம்பவத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று, கவனயீர்ப்பு போராட்டத்தினை மட்டு வந்தாறுமூலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தையும் நடாத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால், நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சாட்சிகள் உள்ளபோதும் 30வருடமாக உரிய சட்ட நடவடிக்கைகள் உள்நாட்டில் மேற்கொள்ப்படாத நிலையில் சர்வதேச விசாரணையை கோரிநிற்கின்றோம் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, வந்தாறுமூலை கிருஸ்ணன் ஆலயத்தில் விசேட பூசைகள் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் வந்தாறுமூலை பல்கலைக்கழக விரிவுரையாளரும் இச்சம்பவத்தின் சாட்சியுமான ஜெயசிங்கம் என்பவரால் இச்சம்பவம் தொடர்பாக நினைவுரை வழங்கப்பட்டதுடன், கிருஸ்ண ஆலய குருக்களால் பிராத்தனை உரையும் நிகழ்த்தப்பட்டது.


No comments