கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘நண்பன்’ விருதுகள் வழங்கும் விழா!

 சென்னையை தலைமையகமாகவும் யாழ்ப்பாணம் , கொழும்பு கனடா ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டும் இயங்கிவரும் நண்பன் ஊடக நிறுவனம் முதற் தடவையாக நடத்திய விருதுகள் வழங்கும் விழா கடந்த 20-09-2020 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள எஸ்டேற் பேங்குவற் விழா மண்டபத்தில் நடைபெற்றது.


விழாவின் ஏற்பாடுகள் ‘நண்பன்’ ஊடக நிறுவனத்தின் இணை நிர்வாகியும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமாக ஆர். என். லோகேந்திரலிங்கம் கனடா இணைப்பாளர் திரு மரியராசா மரியாம்பிள்ளை ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். அவர்களுக்கு ஒத்தாசையாக நண்பன் குழுவில் பணியாற்றும் விக்னேஸ் அவர்களும் இணைந்து செயற்பட்டார்.


விழாவின் ஆரம்பத்தில் செல்விகள் ஹம்சாயினி சாந்தகுமார், அன்ரினா கெங்காதரன் ஆகியோர் கனடிய தேசிய கீதம் தமிழ்த் தாய் வாழ்த்து ஆகியவற்றை இசைத்தனர்.
அன்றைய தினம் ஐந்து சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன.
கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர்கள் திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி, கிருஸ்ணகோபால் செல்லத்துரை, ஆகியோருக்கும் திரு நாகப்பன் வெங்கடேசன் என்னும் கணணித்துறை விற்பன்னருக்கும், இ-குருவி நிறுவன அதிபர் நவஜீவன் அனந்தராஜ் மற்றும் கனடாவில் மூன்று கிளைகளைக் கொண்டியங்கும் சரவணபவன் உணவகக் குழுமத்திற்கும் ‘நண்பன்’ விருதுகள் வழங்கப்பெற்றன.


விழாவை பிரபல தொகுப்பாளினி சில்வியா பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

பிரதம விருந்தினராக கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் திரு றேமண்ட் சோ,மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் அரிஸ் பாபிகியான், லோகன் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறந்த உரைகளை ஆற்றிய பின்னர், வெற்றியாளர்களுக்கான விருதுகளை யும் வழங்கிக் கௌரவித்தனர்.

No comments