செத்த பாம்பிற்கும் அடி மேல் அடி?


அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே முன் வந்து தமது ஜனநாயக உரிமையை நிலை நாட்டியதை கொச்சைப்படுத்தியது தமிழினத்திற்கு செய்யும் துரோகமாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய கே.வி.தவராசா தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த அறிக்கையில் மேலும் தொிவித்ததாவது,தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளையடுத்து “தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் (26-09-2020) நடாத்தியது .


தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு அந்த அளவிற்கு மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியமையானது தமிழரசுக் கட்சியின் தலைவரின் முயற்சியையும் அவரது அழைப்பை ஏற்று பங்குபற்றிய அனைத்து 10 தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களினதும் உணர்வு பூர்வமான பங்களிப்பை கொச்சைப்படுத்தியதாக அமைவதோடு தமிழ் மக்களின் உணர்வலைகளை தொடர்ந்தும் புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.


தமிழ் அரசுக் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு ‘தமிழ் மக்களுக்கு திலீபனின் நினைவேந்தலை செய்யவேண்டும் என்ற உணர்வு அந்த அளவிற்கு இல்லை’ என்று சுமந்திரன் கூறியமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ் மக்களின் மேல் கடுமையான அடக்கு முறையை பாவித்து கோவில்களில் பூசை செய்வதையே தடுத்துள்ள நிலையிலும் மக்கள் உண்ணாவிரதத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பிலும் வெற்றிகரமாக சாதித்துள்ளனர். இந்நிலையில் அஹிம்சை வழியில் போராடிய அஹிம்சாவாதியை நினைவு கூர்வது தமிழ் மக்களின் தார்மீக கடமை என்பது தெளிவாக தெரிகிறது என தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments