மீண்டும் முடங்கிய மன்னார் புகையிரத நிலையம்?


மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இன்று (13) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன் குறித்த ரயில் நிலைய ஊழியர்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


வவுனியா – பெரியகாடு இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவர் நேற்று (12) மாலை மன்னார் செளத்பார் ரயில் நிலையப் பகுதியில்வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில் மன்னார் செளத்பார் ரயில் நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் நடமாடித் திரிந்ததையடுத்து குறித்த ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மன்னார் வரும் ரயில்களும் அங்கு தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை ரயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


அதேநேரம், நேற்று மன்னார் ரயில் நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ரயில் நிலைய ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


மேலும், இன்று மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதிகளில் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments