மக்கள் காணிகளில் சுடலை?

 


மட்டக்களப்பு செல்வா நகர் கிழக்கு எனும் மண்முனை பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் 40 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்பு நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான காணியினை மயானபூமி என பிரகடனம் செய்த மண்முனை பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு, செல்வா நகர் கிழக்கு எனும் மண்முனை பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் 40 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்பு நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான காணியினை மண்முனை பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் கடந்த 26.06.2020ம் திகதி இல. 2,182ம் இலக்க வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலின் பிரகாரம் அது மயான பூமி என பிரகடனம் செய்திருந்தார்.

இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் மண்முனை பிரதேச சபை தவிசாளருக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை 22.09.2020 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மயான பூமி எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடியிருப்பு காணி அமைந்திருந்ததுடன் தவிசாளர் மகேந்திரலிங்கம் இதனை சிறிதளவேனும் கவனத்திற்கொள்ளவில்லை என்றும் காணிகளை மயானபூமி; என பிரகடனம் செய்யும் அதிகாரம் தவிசாளருக்கு இல்லை என்றும் பகிரங்க ஊழியராக இருக்கும் பிரதேச சபை தவிசாளரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நீதிமன்றதின் கடமையாக இருக்கிறது என்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

வழக்கினை நன்கு பரிசீலனை செய்தபின் குற்றஞ்சாட்டப்பட்டபட்ட மண்முனை பிரதேச சபையின் தவிசாளரான சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் என்பவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்தது.

No comments