கூட்டணியில் சேர சுரேஸ் அழைப்பு ?

கூட்டணியில் அங்கத்தவர்களாக சேர சுரேஸ் பிறேமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை தலைவராகவும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்கள் செயலாளர் ஆகவும் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து மக்களது நீண்டகால அரசியல் போராட்டக் கனவுகளை நனவாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் எம்மோடிணைந்து பயணிக்க விரும்பும் அறிஞர் பெருமக்கள், தாய்மார்கள் மற்றும் இளைஞர் யுவதிகள், மாணவர்கள் ஆகியோரை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

நாளைய தலைமுறை நிம்மதியாக வாழ இன்று விக்கினேஸ்வரன் ஐயாவால் தொடங்கப்பட்ட ஜனநாயகப்போராட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்வீர்கள் என நம்புகிறோம்.

தென்னிலங்கை சிங்கள மக்கள் ஒரணியில் திரண்டு அசுரபலத்தோடு ஒரு ஆட்சியை அமைத்துள்ளனர். நாமும் அதுபோன்று பலமான ஒரு பேரியக்கத்தை கட்சி எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களான நாம் எம்மிடையே பல கட்சிகளாக பிரிந்திருந்ததன் விளைவே அரச தரப்புக்கு துணைபோகும் தமிழர் தரப்பினர் அதிகளவில் பாராளுமன்றம் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

இதைமாற்றிட, ஒரு ஐக்கியப்பட்ட புதிய அணியை இந்த மண்ணில் அமைத்திட அலையென திரண்டு இணைந்திட அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம். உங்கள் இணைவு என்பது பிரிந்து நிற்கும் தமிழ் தேசியம் பேசும் கட்சித் தலைவர்களையும் சிந்திக்கவைப்பதோடு உங்கள் அணியை நோக்கி அவர்களும் ஒன்றிணைந்து பயணிக்கும் நிலை உருவாகும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் எமக்கு நிறையப் பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. ஐக்கியம் எனும் தளத்தில் இருந்து எமது அரசியல் அறிவார்ந்த உரிமைப்போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுப்போம் வாருங்கள்.

நாளைய சந்ததி நலமோடு வாழ நல்லதொரு முடிவெடுப்போம்.

No comments