இன படுகொலையாளி பதவியேற்பு?

இலங்கையின் 14வது பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இது தொடர்பான நிகழ்லு களனி ரஜமஹா விஹாரையில் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மகிந்த ராஜபக்ஷ இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ 1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகி முதற் தடவையாக பாராளுமன்றதில் பிரவேசித்தார்.

1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்ட பின்னர் 14வது பிரதமர் என்ற ரீதியில் இன்று அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற உறுப்பினரராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் மகிந்த ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். முதல் தடவையாக 2004ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார். 

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு. மகிந்த ராஜபக்ஸ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். 

இலங்கையின் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகள் இதுவாகும்.

2005, 2010ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார். 

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார். 

2004ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி வரை முதல் முறையாக இலங்கையின் பிரதமராக செயற்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி மீண்டும் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை பிரதமராகவும் செயற்பட்டிருந்தார். 

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார்.

இம் முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய சத்தியப் பிரமாணத்துடன் மகிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள் பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமையைப் பெறுகின்றார்.

No comments