இவர்கள் மீது நடவடிக்கை தேவை! பெயர்களை முன்வைத்தார் விமலேஸ்வரி!

கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் கட்சியின் தலைவருக்கம், செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

என்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ளேன். 

அதற்கு முன்னராக, எமது கட்சின் சிலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்ற கோரிக்கையினையும் தங்கள் முன் தாழ்மையுடன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். 

என்னால் இதன்கீழ் பரிந்துரைக்கப்படும் விடயங்களிற்கு தங்கள் சட்ட நடவடிக்கைகளையும் ஒழுக்காற்று விசாரணைகளையும் செய்ய வேண்டும் என்பதனை நான் வெளிப்படையாகவே கேட்டுக் கொள்கின்றேன்.

சுன்னாகத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், சுமந்திரனின் அறிவுறுத்தலின் படி மாணிப்பாய் தொகுதி தமிழரசுக் கட்சித் தலைவர் பிரகாஸ் என்பவரால், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழ் மக்களின் விசுவாசத்திற்குரிய தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை தரம் தாழ்த்தி ஊடகவியலாளர் வித்தியாதரனைவைத்து விமர்சித்து  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனையும் கூட்டத்தில் இருந்து விமர்சிக்கும் போது கைகொட்டி ஆரவாரம் செய்த சயந்தன், கரிகரன், தயாளன் ஆகியோரையும் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நானும், தமிழ்த் தேசியவாதிகளும் கட்சி உறுப்பினர்களும் தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். 

இது தொடர்பான கருத்தை செல்வா நினைவுத்தூபிக்கு முன்னாள் நடந்த நேர்காணலிலும் நான் பல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன். 

சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் சுமந்திரன் அவர்களை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று தங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். 

அதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நடவடிக்கை எடுக்கும் என மாவை சேனாதிராஜா வழங்கிய உறுதி மொழி இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை உடன் நடைமுறைப்படுத்துங்கள். 

விடுதலைப் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மக்கள் கொடுத்த ஆணையினால் தான் 22 பேர் பாராளுமன்றம் சென்றார்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது. 

இன்று வரை சர்வதேச அங்கிகாரத்துடன் உள்ள மிகப் பெரும் மக்கள் ஆணையை கேள்விக்குட்படுத்தி 75 கள்ள வாக்குகளை நான் போட்டுள்ளேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கூறியது தமிழரசுக் கட்சிக்கு அவமானம் என்பதுடன் பொது வெளியில் எமது மக்கள் ஆணைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

கள்ள ஓட்டுக்கள் போட்டு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பேர் நாடாளுமன்றம் சென்றார்களா? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? விடுதலைப் போருக்கு பின் எங்கள் பிரசன்னங்கள் கள்ள ஓட்டில் தான் கொண்டுவரப்பட்டதா? இதற்கான விசாரணையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

தனது நேர்காணலால் தமிழ் இனத்துக்கும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழரசுக் கட்சிக்கும் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள சிறிதரனுக்கு எதிராக, கட்சி எடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை, நிச்சயம் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

தமிழ்த் தேசியத்திற்கும் விடுதலைக்கும் எதிரான பெண் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதனை நானும் மிதிலைச் செல்வியும், சரோஜா சிவச்சந்திரனும் பெண்கள் அமைப்புக்களுடாக செய்த போராட்டங்களினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிய போதும் தேசியப் பட்டியலில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை முதல் இடத்தில் இருந்து தவிர்த்து, வேட்பாளர் கையொப்பமிடும் போது அம்பிகாவை அழைத்து இருந்ததையும் எல்லோரும் அறிவார்கள்.

ஆனால், எம் இனத்திற்கு எதிரான ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை தேசியப் பட்டியலின் முதலாவதாக இன்று பெயரிடப்பட்டுள்ள அம்பிகா சற்குணராஜா 2018ம் ஆண்டு ஜெனிவா வரை சென்று எம் இனத்திற்கு எதிராக செயற்பட்டதை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இவராது பெயர் உள்வாங்கப்பட்டமைக்கு விசாரணையும் சட்ட நடவடிக்கையும் உடனடியாகத் தேவை என்பதையும் தங்கள் முன்கோரி நிற்கின்றேன். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் வேட்பாளராக கொண்டு வரப்பட்ட சாணக்கியனும் தமிழருக்கு விரோதமாக 2010ம் ஆண்டு தேர்தலில் இலங்கை அரச சார்பு சுயேட்சைக் குழுவில் செயற்பட்டவர் என்பதனை உலகமே அறியும். 

நளினி இரட்ணராஜாவின் வேட்பாளருக்கான விண்ணப்பம் மட்டக்களப்பு வேட்பாளர் தெரிவில் இருக்கவில்லை. ஆனால், கொழும்பில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவில் இந்த விண்ணப்பம் மின்னஞ்சல் ஊடாக கொண்டு வரப்பட்டது என சுமந்திரனின் பிழையான வழிநடத்தல் ஊடாக இவரின் பெயர் உள் நுழைக்கப்பட்டது. 

இந்த முறையற்ற விண்ணப்பத்திற்கு யார் உடந்தையாக இருந்தார்கள்? விசாரணை செய்ய வேண்டிய தகுதி வாய்ந்த இடத்தில் இருந்த எமது கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இந்த விடயத்தில் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் அவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். 

சுமந்திரனால் நடத்தப்பட்ட சகல நேர்காணல்கள் கூட்டங்களிலும், நானும் சம்பந்தர் ஐயாவும் தான் வேறு மொழி தெரிந்தவர்கள். சட்டத்தரணிகள் என்பதை பல தடைவைகள் சொல்வதுடன் எந்த நேர்காணலிலும் எங்கள் தமிழரசுக் கட்சி தலைவரை முன்னிறுத்தியது கிடையாது. 

இது தலைமையை மலினப்படுத்தும் செயலாகும் எதிர் காலத்தில் இவற்றிற்கு முடிவு வைக்கப்பட வேண்டும். தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டே தமிழரசுக் கட்சித் தலைவரை அவமதிப்பதை எப்படி விசுவாசிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?.

அதனால்,  தலைமைக்குக்கட்டுப்படும் நாம் உங்களிடம் வைக்கும் மிக முக்கிய கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழரசுக் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளது.

No comments