பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கு.குருபரன் மீதான நடவடிக்கை தொடர்பில் இன்று (21) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அனைத்து பீட மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டுக்களை  முன்வைத்துள்ளது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது தனது சுயாதீனத்தை இழந்து நிற்கின்றது. அரசியல் தலையீடுகளுக்கும் இராணுவத் தலையீடுகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பல்கலையின் புலமை சார்ந்த சுயாதீனம் பறிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறான விடயங்கள் களையப்பட வேண்டும். முதுநிலை விரிவுரையாளர் குருபரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நீதிமன்றில் வழக்காடுதல் அல்லது விரிவுரையாளராகப் பணியாற்றுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் செய்ய வேண்டும் என்று அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை நீக்கப்பட்டு இரண்டு செயற்பாடுகளையும் அவர் ஆற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர்களின், சமூகங்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு சமூக நிறுவனம். சமூகத்தூடே ஊடாட்டத்தை ஏற்படுத்துவதற்கு பல்கலைக்கு கனதியான பங்கு உண்டு. எனவே தற்போது குருபரன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அழிவினுடைய ஆரம்ப புள்ளியாகவே பார்க்கிறோம்” என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments