கச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது!

யாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் ஒருவர் நேற்று (10) இரவு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்டகுழுவினரால் சுற்றுச்சூழல் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் காலம் என்பதால் யாழ். மாவட்ட செயலகத்துக்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆறு பேரைக் கைது செய்திருந்தனர். அத்துடன், நீர்வேலிப் பகுதியில் அவர்கள் தங்கியிருந்தனர் எனக் கூறப்படும் வீடு ஒன்றும் முற்றுகையிடப்பட்டது. அதன்போது வீட்டிலிருந்து வாள்கள் கைக்கோடரிகள் இராணுவச் சீருடை ஆகியன மீட்க்கப்பட்டிருந்தன.
மேலும் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் பிரதான சந்தேக நபராகவும் இருக்கலாம் என்ற அடிப்படையில் இராணுவத்திலிருந்து விலகிய நபரை பொலிஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் இராணுவத்திலிருந்து விலகினார் எனக் கூறப்படும் நபர் நேற்று இரவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments