எல்லாவெல மேதானந்தவுக்கு வகுப்பெடுக்கும் சி.வி.


தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி எதற்காக நியமிக்கப்பட்டுள்ளதென கூறாமல் கூறிவிட்டார் மரியாதைக்குரிய மேதானந்த தேரர் என தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.


தமிழ் மற்றும் முஸ்லீம்  சரித்திரவியலாளர்களைக் கொண்டிராத குறித்த செயலணி பெரும்பான்மையர் தமிழ் மொழியைப் பேசும் கிழக்கு மாகாணத்திற்கு எதற்காக நியமிக்கப்பட்டுள்ளது என்றால் கிழக்கை சிங்கள பௌத்த மாநிலம் என்று அடையாளம் காட்டவே என்பது தேரரின் கூற்றிலிருந்து புலனாகின்றது.

சபுமல் குமாரயா என்ற சிங்கள இளவரசர் என்று செண்பகப் பெருமாள் என்ற தமிழரை அழைக்கின்றார் எமது தொல்லியலாள தேரர். செண்பக் பெருமாள் என்பவர் தமிழர். செண்பகப் பெருமாள் என்ற கிழக்கிலங்கைத் தமிழ் மகனின் தந்தையான மாணிக்கத் தலைவன் என்ற கரையார் குலத் தலைவன் இறந்த பின் ஆறாம் பராக்கிரமபாகுவால் செண்பகப் பெருமாள் தத்தெடுக்கப்பட்டான். அந்தத் தமிழ் மகனின் பெயரே சபுமல்குமாரயா என்று மாற்றப்பட்டது. அக் காலகட்டத்தில் இப்போது போல் தமிழ் சிங்கள உறவுகள் கூர்மை அடைந்திருந்திருக்கவில்லை.

ஆகவே குறித்த தமிழ் மகனை சிங்கள இளவரசர் என்று தேரரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளமை பிழையான தகவலைத் தருவதாய் உள்ளது. உண்மையை மறைத்து ஏதோ சிங்களவர் ஒருவர் சென்று நல்லூரை ஆண்டார் என்று சிங்களவர் புராணத்தைப் பாட வேண்டிய அவசியம் என்ன? இது சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு கபட நாடகம் அல்லவா?

அடுத்து தேரர் திருக்கோணேஸ்வரம் பற்றிப் பிழையான தகவல்களைப் பரப்பப் பார்க்கின்றார். திருக்கோணேஸ்வரம் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்று. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே பஞ்ச ஈஸ்வரங்கள் இந்த நாட்டில் இருந்து வந்துள்ளன. நகுலேஸ்வரம் (கீரிமலை), தொண்டீஸ்வரம் (தற்போது மாத்தறையில் னுழனெசய என்ற இடத்தில் இருக்கும் வி~;ணு ஆலயம் இருந்த இடத்தில் இச்சிவஸ்தலம் இருந்தது. தொண்டீஸ்வரத்திற்குத் தேனாவரம் என்ற பெயரும் உண்டு) முன்னீஸ்வரம் (சிலாபத்தில் உள்ளது) மற்றும் திருக்கேதீஸ்வரம் (மன்னாரில் உள்ளது) ஆகியவையே மற்றைய ஈஸ்வரங்கள். இவை சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே, புத்தர் பிறப்பதற்கு முன்பிருந்தே, இலங்கையில் இருந்து வந்த சிவலிங்கத் தலங்கள். இராமாயணம் பற்றிக் கூறி இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைப் பார்க்க வாருங்கள் என்று மத்திய அரசாங்கம் சுற்றுலாப் பயணிகளைக் கூவி அழைக்கின்றது. தேரரோ நேற்று வந்த புத்த விகாரையின் இடத்திலேயே கோணேஸ்வரம் பின்னர் கட்டப்பட்டது என்கின்றார். வேண்டுமென்றே சிங்கள பௌத்த விகாரையின் இடத்தில் திருக்கோணேஸ்வரம் கட்டப்பட்டது என்று கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கப் பார்க்கின்றார். இவர் தமது சரித்திரத்தையும் தொல்லியலையும் எமது தமிழ்ப் பேராசிரியர்களிடம் கற்றல் நன்று. கிணத்தில் உள்ள மண்டூகத்திற்கு கிணறு தான் உலகம். அதைப் பொறுத்த வரையில் அதற்கப்பால் எதுவுமே இல்லை. இருக்கவும் முடியாது!

இவரின் இந்த இரு கூற்றுகளில் இருந்தே ஜனாதிபதி செயலணியின் கரவான எண்ணங்கள் வெளி வந்துள்ளன. மதிப்புக்குரிய தேரர் போன்ற மதி கெட்டவர்களே இந்த செயலணியில் இருந்து இராணுவ உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றப் போகின்றார்கள் என்று தெரிகின்றது.

 அவர்களின் சூழ்ச்சி பலித்தால் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று பெயர் பெற்றுவிடும் அதைப் பின்னர் வந்த தமிழர்கள் ஆக்கிரமித்தார்கள் என்ற பொய்யான கூற்றை உலகம் பூராகவும் ஏற்றுக் கொள்ளச் செய்துவிடுவார்கள். எமது தமிழ் சரித்திர மற்றும் தொல்லியல் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உண்மையை உரக்கக் கூற முன்வர வேண்டுமெனவும் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments