தமிழரசின் கொள்கையில் அமைச்சர் பதவி இல்லையெனில் 1965ல் முருகேசன் திருச்செல்வம் எவ்வாறு அமைச்சரானார்? பனங்காட்டான்

அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு பலம் கேட்கிறார் சுமந்திரன். அமைச்சர் பதவி என்பது தமிழரசின் கொள்கையில் இல்லை என்கிறார் அதன் தலைவர் சம்பந்தன். 1965ல் தமிழரசுக் கட்சிப் பிரமுகர் மு. திருச்செல்வம் முதலில் செனட்டராக்கப்பட்டு பின்னர் அமைச்சரானது சம்பந்தனுக்கு ஞாபகம் இல்லையா? கூட்டமைப்பை பலவீனப்படுத்தவே சுமந்திரன் உள்நுழைக்கப்பட்டதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறுவதற்கு சகபாடிகளின் பதில் என்ன?

ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கொரோனா என்ற உயிர்கொல்லி தனது இரண்டாவது அலையை ஆரம்பித்துவிட்டது. விடுதலைப் புலிகளையே வெற்றி கொண்ட எங்களுக்கு கொரோனா பெரிய விடயமல்ல என்ற வீராவேசப் பேச்சுடன் சிங்கள அரசு தேர்தலை நோக்கி நடைபோடுகிறது. 

கொரோனாவினால் நாடு முடக்கப்பட்டாலும் தேர்தல் நடந்தே தீரும் என்றவாறு இராணுவத்தை முன்னிறுத்தி காய்களை நகர்த்தி வருகிறார் கோதபாய.

நான்கு சகோதரர்கள் - சாமல், மகிந்த, கோதா, பசில் ஆகியோர் தங்கள் வீட்டுச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தீர்மானிக்க, முப்படையினரும் அதனை நடத்தி முடிக்கும் பணியை சிரமேற்;கொண்டு வருகின்றனர். 

சொல்லப்போனல் இராணுவ ஆட்சியில் முப்படைகளும் அணிவகுத்து நடத்தும் தேர்தல் இது எனலாம். இங்கு பொலிசார் சும்மா எடுபிடிதான். வெளித்தோற்றத்தில் சட்டத்துக்கும் ஒழுங்குக்கும் இவர்களே பொறுப்பு என்பது போன்று பிம்பம் காட்டினாலும் சர்வமும் போர்க்குற்றவாளிகளான ராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலர் கமால் குணவர்த்தன கைகளில். 

கோதா என்ற சாடிக்கு சவேந்திரா, கமால் என்ற இரண்டு மூடிகள். ஒரு வேலிக்கு இரண்டு ஓணான்கள். 

இன்னமும் மூன்று வாரங்களில் - ஆகஸ்ட் 5ம் திகதி இடம்பெற்றே தீருமென எதிர்பார்க்கப்படும் தேர்தல் பலவகையிலும் முக்கியமானதாக காணப்படுகிறது. அதற்குள் சில விடயங்கள் அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளன. 

தேர்தல் காலத்தையொட்டியதாக சிங்கள பௌத்த வாக்குகளைக் கொள்ளையடிக்கவென அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தமிழர் பிரதேச தொல்பொருள் செயலணி முதலாவது. பலமான பின்னணியில் செயலணியின் முக்கியஸ்தர்கள் மேற்கொள்ளும் இனத்துவேசமான, மதவெறி கொண்ட செயற்பாடுகள் கண்களில் நன்கு புலப்படுகிறது. 

தமிழருக்கு தாயகம், பூர்வீக நிலம் என்பவை இருக்கிறதா என எழுப்பப்படும் கேள்விகளைச் சுற்றி புதிய வரலாற்றை உருவாக்க மேற்கொள்ளப்படும் இராணுவ அரசியல் போக்கு இரண்டாவது. 

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழரின் ஏகப் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தை அலங்கரித்த கூட்டமைப்பினரின் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஒரு தசாப்த கால செயற்பாடும், இனிவரும் காலத்தில் அவர்களை எங்கே வைப்பது என தமிழர் மத்தியில் மேலெழுந்துள்ள சிந்தனையும் மூன்றாவது. 

மீண்டும் தங்களை அதிக பெரும்பான்மையில் வெற்றிபெற வைத்தால் அமைச்சர் பதவியைப் பெறலாமென்ற உட்கிடக்கையை வெளிப்படுத்திய கூட்டமைப்பின் ஓர் அபேட்சகரின் அறிவிப்பும், அதற்கான எதிர்வினைகளும் நான்காவதாக - ஆனால் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 

இப்பத்தியின் விரிவஞ்சி மேலோட்டமாகவே இங்கு பார்க்கப்படுமாயினும், காலவோட்டத்தில் சற்று ஆழமாக இவற்றை அலச நேரிடலாம். 

தமிழரின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கிலுள்ள இருபத்தைந்து சைவ ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியை, புதிதாக நியமிக்கப்பட்ட தொல்பொருள் செயலணி இப்போது தூசு தட்டி கையிலெடுத்துள்ளது. 

இந்த ஆலயங்கள் அமைந்துள்ள பிரதேசங்களை சிங்கள பௌத்த மயமாக்குவதே அரசின் இலக்கு என்பதை இங்கு குறிப்பிட வேண்டியதில்லை. 1956ல் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த கிழக்கு மாகாணத்தின் கல்லோயா என்ற இடத்தில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்து பாரதூரமான சிறைக்குற்றவாளிகளை அங்கு குடியேற்றி தமிழரைக் கொலை செய்த முதலாவது இன அழிப்பை அன்றைய சிங்கள ஆட்சி மேற்கொண்டதை தொல்பொருள் செயலணியின் செயற்பாடுகள் நினைவூட்டுகிறது. 

இச்செயலணியின் முக்கிய உறுப்பினரும் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளருமான எல்லாவல மேதானந்த தேரர், இனமத இரட்டைக் கூர் ஆயுதத்தை தன் தலைக்குமேல் தூக்கியவாறு நடைபோடுகிறார். 

திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தை கோகண்ண விகாரை என்றும், நல்லூர் கந்தசாமி கோயிலை சிங்கள இளமன்னரான சபுமல் குமார கட்டியதாகவும் இத்தேரர் அறிவித்துள்ளதை இலங்கையின் சகல ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன. 

கோதபாய - மகிந்த ஆட்சியில் பரமசிவன் கழுத்துப் பாம்பாக இயங்கும் தேரர், குறுகிய காலத்தில் என்னென்ன செய்ய வேண்டுமென்பதற்கு முன்னுரை எழுத ஆரம்பித்துள்ளார். தமது முன்னுரையை சற்று விரிவுபடுத்தி, இலங்கையில் தமிழர் தாயகம் - தமிழர் பூர்வீக நிலம் என எதுவும் கிடையாதெனவும் சவால் விடுகிறார். 

இவருக்குப் பதிலளிக்க சேர். பொன் அருணாசலத்தையும், விடுதலைப் புலிகளின் தளபதியாகவிருந்த கிட்டுவையும், 1983 இனவழிப்பில் பாதிக்கப்பட்ட கொழும்புவாழ் அகதிகளுடன் புறப்பட்ட கப்பல்களையும் துணைக்கு அழைக்க வேண்டியிருப்பது தவிர்க்க முடியாதுள்ளது. 

சேர். பொன் இராமநாதனின் சகோதரரான சேர். பொன் அருணாசலம் இலங்கையில் தெரிவான முதலாவது சிவில் சேவை அதிகாரி. சட்டசபை உறுப்பினராகவிருந்தவர். 1917ல் இலங்கையர் அனைவருக்குமென இலங்கை தேசிய சங்கம், இலங்கை புனரமைப்பு மன்றம் ஆகியவற்றை நிறுவி அதன் தலைவராக இருந்தவர். 1919ல் உருவான இலங்கை தேசிய காங்கிரசின் முதல் தலைவரும் இவரே. 

ஆனால், இலங்கையின் அரசியல் போக்கில் சிங்கள தலைவர்கள் இனவாத அடிப்படையில் இயங்க ஆரம்பித்ததால் 1921ல் முன்னைய அமைப்பகளிலிருந்து விலகி 1923ல் இலங்கைத் தமிழர் அமைப்பையும், செந்தமிழ் பரிபாலன சபையையும் உருவாக்கினார். 

தமிழர் சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாதென்ற முடிவுக்கு வந்த முதலாவது தமிழ் தலைவரான சேர். பொன் அருணாசலம், தமிழரின் பூர்வீக நிலத்தையொட்டி அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டியதை அன்றே வெளிப்படுத்தினார். 

விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் அதன் தளபதிகளில் ஒருவராகவிருந்த கிட்டுவிடம் வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர், தமிழர் தாயகம் எங்கிருக்கிறது? அதனை எவ்வாறு அடையாளப்படுத்தலாம்? என்ற கேள்வி தொடுத்தார். 

வானம் பார்க்கும் (கூரைகளற்ற) வீடுகளும், இடிந்துபோன கட்டிடங்களும் எங்கெங்கு உள்ளனவோ அதுதான் தமிழர் தாயகம் என்று சுருக்கமாக அவர் பதிலளித்தார். இன்று அதே கேள்வியை யாராவது கேட்பின், இலங்கை இராணுவத்தில் எண்பது வீதமானவர்கள் எங்கு முகாமிட்டுள்ளனரோ அதுவே தமிழர் தாயகமென்று பதிலளிக்கலாம். 

1983 இனவழிப்பின்போது அகதி முகாம்களிலிருந்த கொழும்புவாழ் தமிழரை, அவர்கள் வசித்துவந்த இருப்பிடங்களுக்கு மீளஅனுப்பாது, கப்பல்களில் ஏற்றி, அவர்களை வடக்கு கிழக்குக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அனுப்பியது ஏன்? அவைதான் அவர்களின் தாயக பூமி என்பதை அவரது நெஞ்சு நன்கு அறிந்திருந்தது. 

எல்லாவல மேதானந்த தேரருக்கு இப்போதைக்கு இவைகள் போதுமென எண்ணுகிறேன். 

அடுத்த மாத தேர்தலில் கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் நிச்சயம் கிடைக்குமென கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அடித்துக் கூறி வருகிறார். இதற்கு இசைவாக முன்னாள் எம்.பி. சரவணபவன் யாழ்ப்பாண - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் ஏழு ஆசனங்களையும் கூட்டமைப்பே கைப்பற்றுமென கூறியுள்ளார். 

அப்படியானால், போட்டியிடும் சகல தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களும் தோல்வியடைவார்கள் என்பதே இதன் கருத்து. வடக்கைப் பொறுத்தளவில் முக்கோணப் போட்டியென்று அரசியல் நோக்கர்கள் கருத்துக்கூறி வருகின்றனர். சம்பந்தனின் கூட்டமைப்பு, விக்னேஸ்வரனின் கூட்டணி, கஜேந்திரகுமாரின் முன்னணி ஆகியவையே போட்டியிலுள்ள மூன்று அணிகள். 

விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் அணிகள் ஆகக்குறைந்தது ஒவ்வொரு ஆசனமாவது பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு ஆசனத்தைப் பெறுவதில் சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதனும், ஐக்கிய தேசிய கட்சியின் விஜயகலா மகேஸ்வரனும் மோதுகின்றனர். 

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி பலமிழந்திருப்பதாலும், மகிந்தவின் அணியே ஆட்சியமைக்கப் போவதாலும் மகிந்த தரப்பைச் சேர்ந்த அங்கஜனுக்கு வாய்ப்பு அதிகமென ஊடக விமர்சனங்கள் வெளிப்படுத்துகின்றன. வன்னி மாவட்டத்திலும்கூட சிவசக்தி ஆனந்தனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் சரவணபவனின் ஏழும், சுமந்திரனின் இருபதும் எழுத்தில் வடித்து சட்டம் போட்டு வீட்டுக்குள் தொங்கவிடுவதற்கே பயன்படும். இரண்டு ஷச|களின் ஆரூடம் அல்லது நம்பிக்கை ஆறாம் திகதி தெரியவரும். 

முன்னைய அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் பதவியை புதிய அரசில் சுமந்திரன் எதிர்பார்ப்பது இப்போது வெளியாகியுள்ளது. 

அண்மையில் வடமாராட்சியில் செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், அடுத்த அரசின் (மகிந்த அரசு) அமைச்சரவையில் கூட்டமைப்பு சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுகள், எத்தனை அமைச்சுகள் என்பதைப் பேரம் பேச கூட்டமைப்புக்கு பலம் வேண்டும். அதனைத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். 

மூடைக்குள் இருந்த பூனையை வெளியே விட்டதற்கு சுமந்திரனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். அதே சமயம் சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளரே தவிர தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் அல்ல என்று அதன் மூத்த தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததையும் நினைவிற்கொள்ள வேண்டும். 

சுமந்திரனின் அமைச்சர் பதவி ஆசை பற்றி அவரது சகாக்கள் எவருமே வாய் திறவாதிருக்க தலைவர் சம்பந்தன் மட்டும் இரண்டு வரிகளில் பதிலளித்துள்ளார். புதிய அரசியல் அமைச்சர் பதவி என்ற எண்ணம்  கிடையாது என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கை இல்லையென்றும் தெரிவித் சம்பந்தன் அத்துடன் நிறுத்தவில்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லையென்ற இவரது கருத்து, தேர்தலின் பின்னர் பேசலாமென்ற அர்த்தத்தைக் கொடுப்பதை காணவைக்கிறது. 

தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியை பெறும் கொள்கை இல்லையென்று தெரிவித்த சம்பந்தனுக்கு நினைவூட்ட 1965ம் ஆண்டுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. டட்லி சேனநாயக்கவின் 1965ம் வருட தேசிய அரசில் தமிழரசுக் கட்சியின் பிரமுகரான முருகேசன் திருச்செல்வம் (நீலன் திருச்செல்வத்தின் தந்தை) முதலில் செனட்டராக நியமிக்கப்பட்டு பின்னர் உள்;ராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். மூன்றரை ஆண்டுகள் அப்பதவியில் இருந்தபின், சம்பந்தனின் திருமலையிலுள்ள கோணேசர் ஆலய புனித நகர பிரகடன விவகாரத்திலேயே அவர் அமைச்சர் பதவியை துறக்கும் முடிவை தமிழரசுக் கட்சி எடுக்க நேர்ந்தது. 

தமது கட்சியின் முக்கியமான இந்த அமைச்சர் பதவி விடயத்தை சம்பந்தன் வசதி கருதி மறந்துவிட்டாரா? அல்லது அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்காமையால் அதனை தெரியாதுள்ளாரா? அல்லது வயது மூப்பு காரணமான மறதிக்கோளாறா? 

இறுதியாக இன்னொன்று - கனடாவிலுள்ள தமிழ் வானொலி ஒன்றுக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சில நாட்களுக்கு முன்னர் அளித்த செவ்வியொன்றில் அமைச்சர் பதவி பற்றிக் கருத்துக்கூறுகையில், கூட்டமைப்பை பலவீனப்படுத்தவென்றே சுமந்திரன் கூட்டமைப்புக்குள் புகுத்தப்பட்டதாக தாம் சந்தேகப்படுவதாகவும், தேர்தலின் பின்னர் இவர் தொடர்பாக தீர்க்கமான ஒரு முடிவை ரெலோ எடுக்குமெனவும் உறுதியளித்தார்.
 
இது தேர்தல்கால புஸ்வாணமா? அல்லது கூட்டமைப்பின் வழமையான கூத்தாட்டமா?

No comments