சுட்டிருந்தால் கூட்டமைப்பு இல்லை:கருணா!


தலைவர் சுடச்சொன்னவர்களை தப்ப விட்டமையால் தான் கூட்டமைப்பு தப்பி பிழைத்ததாக கருணா தெரிவித்துள்ளார்.


அம்பாறையில் தேர்தல் பரப்புரை ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 'கருணா மிகவும் மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார். அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன்.

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மதுபானசாலைகள் இருப்பதாகவும் கருணா அம்மான் மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார்.

உண்மையிலேயே அவர் ஓர் ஆண் மகனாக இருந்தால் அவர் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி ஆதாரத்தோடு அவர்கள் நிரூபித்தால் இந்த நிமிடமே நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன். அரசியலில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றேன்.

போலி முகநூலில் பதிவிடுகின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு ஒரு பொறுப்பான நிலையில் இருக்கின்றதாக கூறிக்கொள்கின்ற கருணா இப்படியான கருத்துக்களை சொல்லக்கூடாது.

ஆகவே என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் விடுதலைக்காக வந்தவன். காசு பணத்துக்காக இப்படியான ஒரு செயலை செய்யப்போவதில்லை. கருணா அம்மான் ஓர் ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும். நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இருந்து ஒரு போதும் காட்டிக் கொடுக்கவில்லை.

முப்படைகளையும் கொண்ட எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களை சர்வதேசத்தோடும் இராணுவத்துடனும் சேர்ந்து கருணா அம்மான்  அழித்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை நாங்கள் நிரூபிக்க முடியும்' என  குறிப்பிட்டுள்ளார்.

No comments