பன்றிவேட்டைக்கு வெடி: தெற்கிற்கு எடுத்துக்கொடுக்கும் முகவர்கள்!


வடக்கில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வெடிப்பு சம்பவங்கள் தென்னிலங்கையில் கோத்தா அரசின் வெற்றிக்கான நாடகங்கள் என முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ள நிலையில் இல்லை அது புலிகளது மீள் உருவாக்க முயற்சியென சில தரப்புக்கள் உசுப்பி விட தொடங்கியுள்ளன.


இராணுவ முகாம்களுக்கு அருகில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் 22 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உள்ளூர் வெடிகுண்டு தயாரித்த போது, தவறுதலாக வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரையும் இலங்கை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி,இயக்கச்சி பதியிலுள்ள புளியடி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் குடும்பத் தலைவரான தங்கராசா தேவதாசன் (43) கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிகாயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள் வெடித்தாலேயே அவர் காயமடைந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கிருந்து 2 உள்ளூர் தயாரிப்பு குண்டுகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வெடிபொருள் தயாரித்துக் கொண்டிருந்தபோது, தவறுதலாக வெடித்தது தெரிய வந்தது. மின் ரின்னுக்குள், சி 4 வெடிமருந்தை வைத்து குண்டு தயாரிக்க முயன்றுள்ளார்.

அத்துடன் கரும்புலிகள் இலச்சினை பொறித்த, கரும்புலிகள் நாள் சுவரொட்டியும் மீட்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவரின் மனைவி பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 1994ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட நிலையில், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். புனர்வாழ்வின் பின்னர் 2012 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் பன்றி வேட்டைக்காக வெடிபொருட்களை தயாரிக்கையிலேயே விபத்து நடந்துள்ளது.
எனினும் திருட்டு சந்தையில் வெடிபொருட்கள் பெறப்பட்டதன் தொடர்ச்சியாகவே அச்சத்தில் மனைவி சம்பவத்தை மூடி மறைத்;;துள்ளார்.

No comments