முன்னணியை வலுப்படுத்த கோருகிறார் கஜேந்திரன்!


ஓற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு அதற்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை முடக்குவதற்கு ஆணை கேட்கின்ற தரப்புக்களை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.அதேவேளை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தடம்மாறாது பயணிக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும் .இதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைத்தக் கொண்டு அபிலாசைகளையும் வென்றெடுக்கக் கூடியதாக அமையுமென முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனால் அந்த அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு தமிழ்த் தரப்புக்களே இன்றைக்கு முன்வந்திருக்கின்ற மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே போன்று விக்கினெஸ்வரன் ஐயா தலைமையிலான கட்சியும் அதனை நிராகரிக்க முடியாது என்று கூறி அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

தமிழ்த் தரப்பினர்களே ஒற்றையாட்சிக்குள் தமிழர் அரசியலை முடக்குகின்ற மிகப் பெரிய ஆபத்து தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்படியான தரப்புக்களுக்கு மீண்டும் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்குவார்கயாயின் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கே ஆபத்தாக அமையும். இத்தகைய பாதிப்புக்களை ஒவ்வொரு மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments