தேர்தல் சந்தடிக்குள் அரசியல் கைதிகள் அனுராதபுரத்திற்கு!


நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 31 அரசியல் கைதிகள் கடந்த ஓரிரு நாட்களில் தீடீரென அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் சிலர் அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் விடுதலை பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே வெலிக்கடை மற்றும் நியூமகசீன் சிறைச்சாலையில் தடுப்பில் இருந்த தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதிலும் பெரும் பிரச்சாரங்களுடன் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஜந்து அரசியல் கைதிகள் மீண்டும் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரும் தற்போது மரண தண்டனை உள்ளிட்ட பாரிய தண்டனை பெற்ற கைதிகளுடனேயே தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில. அவசர அவசரமாக இடமாற்றப்பட்டமை தொடர்பில் பல முரணான கருத்துக்கள் வெளிவருகின்றபோதிலும் இடமாற்றத்திற்கான சரியான காரணம் உத்தியோகபூர்வமாக விபரம் தெரிவிக்கப்படவில்லை.

நீண்டகாலமாக சிறையில் வாடும் 96 அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு அண்மையில் அரசியல் ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விடுதலை இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments