தூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்?

தெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வருகின்றது.

ஜனாதிபதி கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட செயலணியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் 'இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை' என்றும் 'கோணேஸ்வரம் கோயில் அல்ல. அது கோகண்ண விகாரை' என்றும் வெளியிட்ட கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

கோணேச்சரம் என்பது பாடல் பெற்ற சிவதலம். எல்லாவல மேதானந்த தேரர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இது தொடர்பில் ஆலய நிர்வாகம் உரிய பதிலை வழங்க வேண்டும். அத்துடன் புத்தசாசன அமைச்சுக்கு சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை இந்துமாசபா தலைவர் வேலு சுரேஸ்வர சர்மா கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் பற்றிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் விவசாய துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனும்; கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து மக்களின் வரலாற்று தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக  விளங்கும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் கருத்து வெளியிட்டமையை ஏற்று கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை ஆண்ட தமிழ் மன்னான இராவணன் சிவபூஜை செய்த திருத்தலமாகவும் குறித்த ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.சுமார் 2000 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ்ர்களின் தொல்பொருள் ஆய்வுகளின் புகழிடமாக விளங்குகின்ற வெடுக்குநாறி, செம்மலை நீராவியடி, அரிசி மலை, திரியாய் கண்ணியா, மத்தலவள முதலான 15 பிரதேசங்களை உள்ளடக்கி கதிர்காமம் வரை தமிழர்களின் புராதான அகழ்வாராய்சி பகுதிகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

இந் நிலையில் தமிழர்கள் புராதன பகுதிகளை அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதாக கூறி பௌத்த வரலாற்று சிதைவுகளை உட்சேர்க்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை வருத்தம் அளிக்ககூடியதாக உள்ளதாகவும் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

No comments