யானை தாக்குதலிலேயே மரணம்?

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் விரிவுரையாளரைத் தாக்கிக் கொன்ற காட்டு யானை குறைந்தது 10 அடி கொண்டதாகவும் 50 வயதுடையதாகவும் 5000 கிலோ எடை உடையதாகவும் இருந்திருக்க வேண்டும் என யானை ஆராய்ச்சியாளர் கலாநிதி. எஸ். விஜயமோகன் தெரிவிக்கின்றார். 


விரிவுரையாளர் மீது யானை தாக்குதல் நடத்தியதைக் கேள்விப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து நேரில் ஆய்வுசெய்த போது அங்கிருந்த யானையின் பாதத்தடங்களை ஆராய்ந்ததன் மூலமே இந்த விடயங்களைக் கூறமுடிவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்திய யானை அந்த பிரதேசம் தொடர்பாக மிகவும்   பரீட்சயமானதொன்றாக இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக அவர் மேலும் கூறினார். புதிதாக ஒரு இடத்திற்கு வரும் யானையென்றால் அது அதிக உற்சாக  மேலீட்டால் அந்த இடத்திலேயே இலத்தியைப் போடும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் ஆனால் இந்த யானையின் இலத்திகளை சம்பவ இடத்திற்கு அருகாமையில் காணமுடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

நேற்று முன்தினம் இரவு யானைத்தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் (19) உயிரிழந்துவிட்டதாக நேற்றையதினமே செய்திகள் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியாகியிருந்த போதும் இன்று காலையே அவர் உயிரிழந்தமை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டது. 

யானைத்தாக்குதலை அடுத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதீக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார். 

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட தறுவாயிலேயே அவர் மூளைச் சாவைத்தழுவியிருந்ததாகவும் ஆனால்  சுவாச உதவுகருவியான வென்டிலேட்டரில் அவர் வைக்கப்பட்டிருந்தாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அவரது பெற்றோர்கள் வென்டிலேட்டரில் இருந்து அகற்றுவதற்கான சம்மதத்தை வழங்கும் வரையில் காத்திருந்தமைகாரணமாகவே மரணம் தொடர்பாக முரண்பாடான தகவல்கள் வெளியானதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 


யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபிரிவு விரிவுரையாளரான கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தாக்குதலிற்குள்ளானவரும் மற்றுமொருவரும் வணக்க ஸ்தலத்திற்கு சென்று திரும்புகையிலேயே யானை குறித்த இருவரையும் துரத்தியுள்ளது.

இதன்போது இருவரும் வெவ்வேறு திசையில் தப்பி ஓடியுள்ளதுடன் யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments