சுமந்திரனை விலக்க டெலோ முயலும்:விந்தன்!



கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று அக் கட்சியின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.



யாழ்.ஊடக அமையத்தில்  நண்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகளை விமர்சித்தமை தொடர்பில் எமது கட்சியில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் காட்டமான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்திற்கு அவர் நேரடியாக சென்று தனது நிலைப்பாட்டை தெளிவாக தமிழரசு கட்சியினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். கட்சிய தலமை கூட்டத்தில் கூட்டத்திலும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஆயுத போராட்டத்தையும், தலைவர் பிரபாகரனையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி புலிகளை விமர்சித்த சுமந்திரன்  தான் 5 வயதில் இருந்து கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் வாழந்து வருவதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் தான் வாழ்ந்தமை பெரும் பாக்கியமாக சொல்கின்றார்.

சுமந்திரனுக்கு அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றி தெரியாதவர். ஆயுதப் போராட்டம் ஏன்? எதற்கு? யாரால் உருவானது என்றும் தெரியாது.
எத்தனை போராளிகள் தமது இன்னுயிர்களை கொடுத்தார்கள் என்றும், எத்தனை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், கோடான கோடி சொத்துக்கள் இழக்கப்பட்ட வரலாறும் அதன் இலட்சியங்களையும் சுமந்திரன் கொச்சைப்படுத்தியுள்ளார்.

சுமந்திரன் ஒரு சாதாரண மனிதன் என்றால் அவருடைய கருத்துக்களை சாதாரணமாக விட்டுவிடலாம், ஆனால் கூட்டமைப்பின் போச்சாளர் என்ற பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளமுடியாத மன்னிக்க முடியாத கீழ்த்தனமான செயற்பாடாகும்.

இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த சுமந்திரனை இப்படியே விட்டுவிடுவதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சுமந்திரனை பதவி விலக்கும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டால் அதனை எமது கட்சி முன்னின்று அழுத்தங்களை கொடுக்கும். நானும் ஒரு போராளி என்ற வகையில் வரலாறு தெரியாத சுமந்திரனை பதவி விலக அழுத்தங்களை கொடுப்பேன்.


முதலில் இலங்கை தமிழரசு கட்சி இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை பொறுத்து எமது கட்சியின் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துவோம் என்றார்.

No comments