குடியேறிகளை நாடுகடத்த வெளிநாட்டு தூதரங்களின் உதவியைக் கோரும் மலேசியா

சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுபவர்களை நாடுகடத்த பல நாட்டு தூதரங்களின் உதவியை மலேசிய அரசு கோரியிருக்கிறது.

தற்போதைய நிலையில், இதுதொடர்பாக இந்தோனேசிய மற்றும் சீன தூதரங்கள் சாதகமான பதிலை அளித்துள்ளதாக மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்திருக்கிறார். 

இதன் அடிப்படையில், முதல் கட்டமாக 2,761 இந்தோனேசியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதில் ஒரு பகுதியாக 450 இந்தோனேசியர்கள் விமானம் வழியாக ஏற்கனவே நாடுகடத்தப்பட்டு இருக்கின்றனர். இத்துடன் மேலும் 445 குடியேறிகள் ஜூன் 10ம் தேதி நாடுகடத்தப்பட உள்ளனர். வரும் ஜூன் 22ம் தேதி, 1,294 இந்தோனேசிய குடியேறிகள் படகு வழியாக நாடுகடத்தப்பட உள்ளனர். 

இரண்டாவது கட்டமாக, அடுத்த இரண்டு மாதங்களில் 2,623 இந்தோனேசிய குடியேறிகள் நாடுகடத்தப்பட உள்ளனர். அதே போல், 500க்கும் மேற்பட்ட சீனர்களை நாடுகடத்த சீன தூதரகம் ஒத்துழைப்பு அளித்துள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 675 குடியேறிகள் (வெளிநாட்டினர்கள்) கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்கு பின்னர் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

அதே சமயம், கொரோனா காரணமாக மலேசியாவில் விதிக்கப்பட்ட பொது நடமாட்ட கட்டுப்பாட்டு காலத்தில் சட்டவிரோதமாக மலேசிய எல்லையை கடக்க முயன்ற 1,517 வெளிநாட்டினர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 

No comments