ஜெயானத்தமூர்த்தியை கட்சியிலிருந்து கலைத்துவிட்டோம்! கருணா

Karuna Jeyanadamorthy
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக ஒட்டுக்குழு ஆயுததாரியும் முன்னாள் அமைச்சருமான கருணா அறிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயற்குழு கூட்டத்தின் பின் நடைபெற்ற பின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணா மேலும் தெரிவிக்கையில்:-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியை எமது கட்சியிலிருந்து விலக்கி நீண்டகாலமாகின்றது. ஆனால் அவர் கட்சியில் தான் போட்டியிடுவதாக மக்கள் மத்தியில் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.

நான்  அம்பாறை மாவட்டத்திலே போட்டியிடுகின்றேன். அங்கு நான் வெற்றிபெறுவது உறுதியான முடிவு.

கடந்த காலத்திலே பல அரசியல் கட்சிகள் இருந்தும். பல தவறுகளை நிகழ்த்தியிருக்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது போராட்டத்தை வைத்துதான் இவ்வளவு காலம் பிழைப்பு நடாத்தி வந்தார்கள். விடுதலைப்புலி போராளிகளை கேவலப்படுத்தும் வகையில் சுமந்திரன் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரைக்கூட நீக்கமுடியாத கட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு திணறிக் கொண்டிருக்கின்றது. 

முதலில் எங்கள் கட்சியிலிருந்து திருட்டுத்தனமாக ஓடிச்சென்ற ஜெயானந்த மூர்த்தி தற்பொழுது எங்கள் கட்சியில்தான் போட்டியிடுவதாக பொய்ப்பிரசாரங்களை மக்கள் மத்தியிலே செய்து வருகின்றார். அவரை நாங்கள் எமது கட்சியிலிருந்து விலக்கி நீண்டகாலமாகின்றது. எனவே அவரைப்போன்றவர்கள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றார்கள்.

இன்று எங்களுடைய கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நெருக்கமான உறவைப் பேணுவதாக இருக்கின்றது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திதான் இன்று நாங்கள் தனித்துவமாக வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றோம்.

ஏனெனில் மொட்டுக் கட்சியில் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை. தையல் இயந்திரத்தில் போட்டியிடுகிறோம். எமது தமிழ் மக்களின் உரிமைகளை, அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்கள் கட்சியிலே போட்டியிட்டு வென்று மத்தியிலே ஒரு கூட்டாட்சிக்கு ஆதரவு தருவோமென்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என கருணா தெரிவித்துள்ளார்.
No comments