தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல்

இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது.தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று தேர்தலுக்கு தாம் தயாரென அறிவித்துள்ளது.இத் தேர்தல் வடகிழக்கிலும் தென் இலங்கையிலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது.

ஆளும் தரப்பினைக் கடந்து தென் இலங்கையில் மோதிக் கொள்ளும்
எதிர்கட்சியினரும் வடகிழக்கில் மோதிக் கொள்ளும் தமிழ் தரப்புமாக ஒரு ஆபத்தான அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற போக்கினைக் காணமுடிகிறது. இது தமிழ் தரப்பின் பராளுமன்ற தேர்தல் பற்றியதாக அமையவுள்ளது.

எத்தகைய பலமான கோட்பாட்டை முன்வைக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. புதிதாக களமிறங்கும் தமிழ் மக்கள் கூட்டணியும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பிரதான கட்சிகளாக வடக்கில் அமைய  கிழக்கில் சற்று மாறுபட்ட அணிகள் களத்தில் உள்ளனர்.

முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியும் அதன் கொள்கையையும் மக்கள் மத்தியில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை உற்று நோக்குவது அவசியமானது. மிக நீண்ட காலம் தமிழரது அரசியலில் செல்வாக்குச் செலுத்திய தமிழ் தேசியக் கூட்மைப்பு சமீப காலமாக அதிக விமர்சனங்களை எதிர் நோக்கி
வருகிறது.

காரணம் தமிழர் பிரச்சினையை விடுத்து தென் இலங்கையையும் அதன் ஜனநாயகத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் பாதுகாக்க முயன்றதுடன் தமிழரை ஏமாற்றலாம் என்பதை தென் இலங்கைக்கு உறுதிப்படுத்தியதுமாகும். மேலும் உலகம் தமிழருக்காக கொடுத்த வாய்ப்புக்களை  தமது சுயநலனுக்காகவும் தென்
இலங்கை ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டு பயனற்றதாக்கியமையாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளை முந்நிறுத்தி தேர்தலில் வென்றுவிட்டு அவர்களையும் மக்களது போராட்டத்தையும்
கொச்சைப்படுத்தியதுமாகும். அது மட்டுமன்றி தமிழ் மக்களது அனைத்துப் போராட்டங்களையும் காட்டிக் கொடுத்ததுடன் அவற்றில் எதனையும் ஆதரிக்காதது. மட்டுமன்றி அவற்றை கீழ் தரமாக விமர்சனம் செய்துமுள்ளது.

இத்தகைய நிலையில் மீண்டும் தமக்கு வெற்றி கிடைக்கும் என சில
வேட்பாளர்களும் அதிக பெரும்பான்மை வடக்கு கிழக்கில் கிடைக்கும் எனவும் அத்தகைய ஆணையை தமக்கு மீண்டும் ஒரு தடவை தருமாறும் மக்களிடம் கோரிவருகின்றனர். அதற்காக அவர்கள் முன்வைக்கும் பிரதான வாதம் தென் இலங்கையில் பலமான இராணுவ ஆட்சி அமர்ந்துள்ளதால் அதனை எதிர் நோக்க
பெரும்பான்மை  தேவை. ஒற்றுமை தேவை. அதனால் தமிழ் மக்கள் ஆதரவு தரவேண்டும் என குறிப்பிடுகின்றனர் த.தே.கூ.அமைப்பினர். 

இதில் ஒரு பிரதான கேள்வி அவர்கள் மீது தமிழ் மக்கள் முன்வைக்கிறார்கள்.

அதாவது 2010 முதல் 2015 வரை தற்போதைய ஆட்சிக்கு நிகராக ஜனாதிபதியின் சகோதரனின் ஆட்சி காணப்பட்டது. அப்போது தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கே பெரும்பான்மை ஆதரவு தந்து பாராளுமன்றம் அனுப்பியிருந்தோம். அப்போது என்ன செய்தீர்கள். 

அக்காலப் பகுதியில் எத்தகைய மாற்றத்தை வடக்கு கிழக்குப்
பொறுத்து செய்திருந்தீர்கள். முள்ளிவாய்க்காலுக்கு பின்பு இரண்டாவது தடவை ஆளும் கட்சியுடன் சேர்ந்து செயல்படப் போவதாகவும் மகாத்மா காந்திக்கு நிகரான தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு அடுத்த தலைவருக்கு வாக்களிக்குமாறு
சொன்ன போது வாக்களித்தோம். இறுதியில் அவர் என்ன மாற்றம் செய்தார். அது மட்டுமல்ல ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு எதிர்கட்சியாகவும் எதிர்கட்சி தலைவராகவும் இருந்து கொண்டு வடக்கு கிழக்குக்கு அல்லது தமிழ்
மக்களுக்கு என்ன செய்தீர்கள்? ஆளும் தரப்பினை  பாராளுமன்றத்தில் பாதுகாத்ததுடன் ஜெனீவா வரை சென்று அரசாங்கத்தினை பாதுகாத்தீர்கள்.

அத்துடன் உங்களது பொருளாதாரத்தையும் வசதிவாய்ப்புக்களையும் பெருக்கிக் கொண்டதுடன் ஆளும் தரப்புக்காக அப்போதைய எதிர் தரப்பினை அவமதித்தீர்கள். தற்போது அது ஆளும் தரப்பாக மாறியிருப்பதுடன் அதன் முன் நின்று உரையாடவோ
எதிர் கொள்ளவோ அல்லது அத்தரப்பு மேற்கொள்ளும் எந்த நகர்வையும் தட்டிக் கேட்கக் கூடிய திராணி இல்லாது திணறுகிறீர்கள். பிரதமர் ராஜபக்ஸவுடனான சந்திப்பில் ஒரே ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே தமிழரது பிரச்சினை பற்றி உரையாடலை முன்வைத்துள்ளார். 

சட்டவல்லுனர் தனித்து சென்று கைலாகு கொடுத்து உரையாடி உறவை பலப்படுத்திவிட்டு வந்துவிட்டார். இதற்குப் பின்னரும் தற்போதைய அரசாங்கத்தை த.தே.கூ.ஆல் எதிர் கொள்ள முடியும் என்று கூறுவது ஏமாற்றுத் தனமாகும். கடந்த நான்கு வருடத்திலும் ஒரு தடவை ஏனும் பாராளுமன்றத்தில் பேசாத பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கிறார் என்பதையும் மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.

அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பொறுத்து மக்களிடம் உள்ள கேள்விகள் அதிகமுண்டு. கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைப்பது தான் அரசியல் கட்சி என்ற சிந்தனை இல்லாதவர்கள். பூகோள அரசியல் உலகளாவிய
அரசியல் புவிசார் அரசியல் என்றெல்லாம் பேசுபவர்கள் ஆனால் அயல் நாடான இந்தியாவை எப்படிக் கையாளலாம் எனத் தெரியாதவர்கள் என அதிகம் விமர்சிக்கப்படுகின்றனர்.

மூன்றாவதாக புதிதாக அமையப் பொற்ற தமிழ் மக்கள் கூட்டணி பற்றியது. இது தமிழ் மக்களுக்கு புதிய வரவாகும். த.தே.கூ. அறிமுகமான முன்னாள் முதலமைச்சரே இதன் தலைவராவார். இவர் மீது மக்களுக்கு கேள்வி என்பதை விட அதிக நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.

அது மட்டுமன்றி தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக் கூடிய தலைமையாக த.ம.கூ. தலைமையை மக்கள் பார்க்கிறார்கள். அதன் அணியினரை விட தலைமை தமிழ் மக்களது பிரச்சினையை கையாளும் திறன் இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் மக்கள் யதார்தமாகவே தென் இலங்கையை எதிர்கொள்ளும் திராணியும் ஆளுமையும் தலைமையும் த.ம.கூ.தலைமையிடமே இருப்பதாக  நம்புகின்றனர். எந்த பதவியும் இல்லாத நிலையிலும் தென் இலங்கையின் ஒவ்வொரு செயலுக்கும் பதில்
அளிப்பதுடன் அதனை நோக்கி இளம் தலைமுறையினரை வழிநடாத்துகின்றார்.


நியாயவாதியாக மட்டுமல்லது தமிழர் வரலாறு அவர்களது பூர்வீகம் பண்பாடு என்பவற்றுடன் மதப் பற்றினையும் அவர் கொண்டிருப்பதை மக்கள் உணருகின்றனர்.

எனவே சமகாலத்தில் எழுந்துள்ள மிகப் பிரதான நெருக்கடியாக தென் இலங்கையை எதிர் கொள்வது அவசியமானது. அத்தகைய தலைமை தமிழருக்கு தேவையான காலகட்டம். அத்துடன் கிடைக்கும் வாய்ப்புக்களை உலகத்துடன் இசைந்து நின்று செயல்படுத்தும் தலைமையும் ஆளுமையும் தமிழருக்கு அவசியமானது. அதற்கு மிகப் பொருத்தமான அணி த.ம.கூ.மட்டுமே ஆகும்.தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை கொடுத்து தமிழ் மக்கள் ஏமாந்து விட்டனர்.இத்தடவை மாற்றம் செய்ய வேண்டிய
நிர்ப்பந்தத்திலேயே தமிழர் உள்ளனர். ஏனைய தரப்பு நடைமுறைக்கு வராத கொள்கை மட்டுமே கொண்ட அணி. அது வேகமாக அனைத்தையும் முறித்துக் கொட்டிவிடும். அதன் விளைவு தற்போதைய நிலையை விட மோசமாகும்

No comments