தமிழ் தேசிய ஊடகங்களை முடக்க சதி:அரசு மும்முரம்!


தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் முடக்கிவிட மீண்டும் புதிய அரசு தனது நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. 

யுத்த காலத்திலும் பின்னருமாக ஊடகவியலாளர்களை கொன்றும் காணாமல் ஆக்கியும் ஊடக நிறுவனங்களை தாக்கியும் செயற்பட்ட அதே தரப்பு இறுதியாக நாட்டுப்பற்றாளர் நடேசன் நினைவேந்தலை குழப்பியடிக்க முற்பட்டமை வரை விடாது தனது கைகங்கரியங்களை தொடர்கின்றது.

இந்நிலையில் தனது ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் காரணமாக ஊடகவியலாளர்களது பணிகளை முடக்கிவிடலாமென கனவு கண்டுவந்த தரப்பு தற்போது அது சாத்தியப்படாத நிலையில் போலி ஊடக அமைப்புக்களை நிறுவத்தொடங்கியுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான போலி அமைப்புக்களை புலனாய்வாளர்களை கொண்டு அரச கட்டமைப்பு உருவாக்கி வந்த போதும் அவை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் புலனாய்வு கட்டமைப்பின் நேரடி மற்றும் நிதி ஏற்பாட்டில் புதிய ஊடக அமைப்பொன்றை யாழ்.ஊடக புலனாய்வு மன்றம் எனும் பேரில் உருவாக்கியமை அம்பலமாகியுள்ளது.

அரச ஊடகங்களினை சேர்ந்த ஒரு சிலரும்,பலாலி புலனாய்வு மையத்தில் மாத வருமானம் வழங்கப்பட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தரப்பை சேர்ந்தவர்கள்,சிவில் செயற்பாட்டாளர்களை வேவு பார்க்க நியமிக்கப்பட்ட சிலரும் இதன் பின்னாலிருப்பது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தரப்பினை சேர்ந்த சிலரும் இதனுள் இருப்பது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதுடன் மக்களிடையே தோல்வியை அவத் சந்திக்க வைக்க சதி நடக்கின்றதாவென்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

எனினும் இதன் பின்னணியில் இந்திய துணைதூதரக அதிகாரிகள் சிலர் இருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ள போதும் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.  

No comments