வடகிழக்கில் 20ஆயிரம் புலனாய்வாளர்கள்:மாவை!


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவ நிர்வாக கட்டமைப்பினை உருவாக்க 20ஆயிரம் புலனாய்வாளர்கள் மக்களிடையே ஊடுருவி இருப்பதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சகிதம் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய போதே இத்தகவலை அவர் வெளியிட்டார்.


கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டிலே இராணுவ ஆட்சி ஒன்றை நிறுவினாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை எனவும் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்சவினுடைய இயல்பு, அவருக்கு இருக்கின்ற இராணுவத்தில் கடமையாற்றிய அனுபவங்களாகும்.ஆனாலும் அவர்;, இப்போது ஜனநாயக ரீதியாக ஒரு அரச தலைவராக வந்துள்ளார் .

எதிர்காலத்தில் ஒரு பூரணமான இராணுவ ஆட்சி ஒன்றை அவர் நிறுவுவதற்கு தயாராகின்றார்.அவர் சர்வாதிகாரமான ஆட்சியொன்றை ஜனநாயகத்திற்கு ஊடாக, ஜனநாயகத்தில் பெற்ற வெற்றி என்று சொல்லி இந்த நாட்டிலே நிறுவினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படித்தான் நிலைமைகள் இருக்கின்றன.

இந்த நிலைமையில் இன்றைக்கு ஜனநாயக சக்திகள் எதிர் அணியிலே ஐக்கிய தேசியக் கட்சியும் பலவீனப்பட்டு பிளவுபட்டு நிற்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது.

அதை விட முஸ்லிம்கள் தரப்பில், மலையக தரப்பில் கூட எல்லோரும் பலமாக அல்லது ஒன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலைமை இன்னும் ஏற்படவில்லை.

அதை விட முக்கியமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஒரு பலமான நிலையை நிருபிக்க வேண்டிய, சூழல் இருக்கின்றதெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

No comments