தலைவருக்கு துரோகம் வேண்டாம்!


முன்னாள் போராளிகள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், அதன் தலைவரையும் கொச்சைக் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவார்களாகவிருந்தால் அந்த தலைவருக்கும், அவர்களுடன் இணைந்த மாவீரர் குடும்பங்களுக்கும் அவர்கள் இழைக்கின்ற பெரியதொரு துரோகத்தனமாக தான் நான் பார்க்கின்றேன் என தமிழ் மக்கள் கூட்டனியின் பொதுச் செயலாளரும், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும், தமிழரசுக் கட்சிக்குள்ளேயும் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளது போராட்டத்தையும், தலைவர் பிரபாகரன் அவர்களையும் கடந்த காலத்தில் திரு சம்மந்தன் அவர்கள் கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் மிக மோசமான முறையில் விமர்சனம் செய்திருந்தார்,

குறிப்பாக அவர்களது போராட்டம் பயங்கரவாதப் போராட்டம். கொடூரமானவர்கள். அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியமைக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை. பிரபாகரனையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பகிரங்கமாக தெரிவித்த பிற்பாடு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தங்களுடைய தலைவரையும், அந்த தியாகங்களையும் கொச்சைப்படுத்துகின்ற ஒரு கட்சியோடு அவர்கள் இணைந்து கொள்வார்களாகவிருந்தால் அது அந்த தலைவருக்கும் அவர்களுடன் இணைந்த மாவீரர் குடும்பங்களுக்கும் அவர்கள் இழைக்கின்ற பெரியதொரு துரோகத்தனமாக தான் நான் பார்க்கின்றேன்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டமைப்பில் உள்ள மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்கள் அண்மையில் தாம் முன்னாள் போராளிகளை இணைத்து கொள்வதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். உண்மையில் இவர்களுக்கு முன்னாள் போராளிகள் மீது அக்கறை இருக்குமாக விருந்தால் அந்தப் போராட்டத்தையும், தியாகத்தையும், கடந்த காலத்தில் மதித்து நடந்தார்களா? அவர்களது தியாகங்களை கொச்சைப்படுத்தாமல் நடக்க முடிந்தததா என்று கேட்டால் எதுவுமில்லை.
இற்கு பிற்பாடு முன்னாள் போராளிகளில் எத்தனையோ துறை சார்ந்தவர்கள் உள்ளார்கள். அவர்களில் மிக அரசியல் அனுபவம் பெற்றவர்கள் உள்ளார்கள். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபை, பாராளுமன்றம் என்பவற்றில் சந்தர்ப்பம் வழங்கியிருக்கலாம். அல்லது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக எதுக்குமே பிரயோசனமில்லாதவர்களை கடந்த 20 வருடமாக நியமித்துள்ளார்கள். போராளிகளில் அக்கறை இருந்தால் போராளிகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் அவர்களது தியாகத்தை மட்ட ரகமாக கொச்சைப்பாடுத்தி விட்டு தற்போது ஒரு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவர்களுக்கு முன்னாள் போராளிகள் மீது அதிக பாசம், பற்று இருப்பதாக காட்டுவது என்பது இவர்களது பொய்யும் பிரட்டுமான ஒரு பிரச்சாரம்.

ஆகவே முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் இப்படியான போலித் தனங்களுக்கு ஆதரவு வழங்காமல் தியாகங்ககைளையும், போராட்டதையும் எதிர்காலத்தில் மதித்து நடக்கக் கூடியவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

No comments