ஆணைக்குழுவையும் பாழ்படுத்தி விட்டார்;கலாநிதி குருபரன்.


கலாநிதி ரட்ணஜீவன் ஹூல் SLPPக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தான் அந்த காணொளியில் சொல்கிறார்.  எவ்வளவு தான் வியாக்கியானம் சொன்னாலும் உதிர்த்த வார்த்தைகள் உதிர்த்தவையே. சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ஒரு கட்சி தொடர்பில் எதிர்மறையாக கருத்து சொல்ல முடியாது. 19ஆவது திருத்தத்தை ஒளித்துக் கட்ட எதிர்பார்த்து இருக்கும் பொது ஜன பெரமுனவுக்கு உதவி செய்திருக்கிறார் கலாநிதி ஹூல் என தெரிவித்திருக்கிறார் கலாநிதி குருபரன்.


கலாநிதி ஹூல் அவர்கள் சொல்லியவற்றின் உள்ளடக்கத்தை வைத்து நாம் அவை சரியா பிழையா என செய்ய முடியாது. இது ஓர் முறை சார் பிரச்சனை. தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனம் தோற்றப்பாட்டிலும் (appearance) உள்ளடக்கத்திலும் (content) களங்கம் இல்லாமல் இருப்பது தேர்தல் செயன்முறை மீதான நம்பகத்தன்மைக்கு அடிப்படையானது. சுயாதீன ஆணைக்குழுக்கள் வேண்டும் என்று நினைக்கும் எவரும் அவருடைய கருத்தை ஏற்றுக் முடியாது.

கலாநிதி ஹூல் ஓர் சனநாயக விரும்பி என்று நான் நம்ப தயாரில்லை. அவரது பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு 2015 விதந்துரை செய்தவர்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அதனை செய்தார்கள். அப்படி செய்த 'சனநாயக போராளிகள்' இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். அனைத்து விதிகளையும் மரபுகளையும் மீறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குறிப்பாக மணிவண்ணனனை குறி வைத்து நேரடியாக பொலிஸாரை வழக்கு போட வைத்தவர். நேரடியாக சென்று பொலிசுக்கு ஆணைக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் வாக்குமூலம் ஒன்றை வழங்கினார். (அப்படி தேர்தல் கால முறைப்பாடு தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனிப்பட்ட அக்கறை முடியாது) சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்), சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் (வட மாகாணம்) மீது தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் என்ற கோதாவில் வழக்கை முற் கூட்டி அழைக்க அழுத்தம் கொடுத்து மணிவண்ணனுக்கு வழக்கில் அழைப்பு விடுக்குமாறும் அழுத்தம் கொடுத்தவர் கலாநிதி ஹூல். (இதனை பொலீசார் நீதவான் முன்னிலையில் ஒப்புக்கொண்டனர்). தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக இருக்கும் காலத்திலேயே முன்னணியை விமர்சித்து பல கட்டுரைகளை வரைந்தவர்.

இன்று மொட்டை விமர்சிக்கும் இதே கலாநிதி. ஹூல் தான் 2006இலும் 2011இலும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை பெற தியேட்டர்ரை நாடியவர். புலி எதிர்ப்பை மூலதனமாக்கி பேரவையின் மூன்றாம் தெரிவாக இருந்த கலாநிதி. ஹூல் மகிந்த ராஜபக்சவினால் வெறுமனே அரசியல் காரணங்களுக்காக துணைவேந்தராக நியமிக்கப்படும் போது அப்போது அவருக்கு ராஜபக்சவின் அரசியல் குப்பையாக தெரியவில்லை போலும். 2011 இல் பாவம் அமைச்சர் கண்டுகொள்ளவில்லை. அமைச்சரை நாடி பைலோடு அப்போது பலர். ஹூல் விசுவாசமாக இருக்க மாட்டார் என்று அமைச்சர் கருதினார். கைவிடப்பட்டார். குப்பைகள் எவை என்று கலாநிதி ஹூல் அன்று அடையாளம் கண்டு கொண்டார் போலும். பழம் எட்டாத போது குப்பை தெரிந்தது.

மொட்டு குப்பை கட்சி என்பதை கலாநிதி. ஹூல் சொல்லித் தான் தமிழ் மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவரிடம் வகுப்பு எடுக்கும் அளவிற்கும் நாமில்லை, எடுப்பதற்கு அவருக்கு தகுதியும் இல்லை. கடைசியில் சுயாதீன ஆணைக்குழுவையும் பாழ்படுத்தி விட்டார்என தெரிவித்திருக்கிறார் கலாநிதி குருபரன். 

No comments