யாழ்.பல்கலைக்கு துணைவேந்தரை தேடி குழு?


யாழ். பல்கலைக்கழகம் முற்றாக ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி,பொதுஜனபெரமுன வசம் செல்லவுள்ள நிலையில்; கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெற்றிடமாகவுள்ள துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிக்க ஊக்குவிப்பதற்கென யாழ். பல்கலைக் கழகப் பேரவையினால் மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாம்.

நேற்று (22) நடைபெற்ற யாழ். பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்திலேயே இம்மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில், வரலாற்றுத் துறைச் சிரேஸ்ட பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் மற்றும் பௌதிகவியல் துறைச் சிரேஸ்ட பேராசிரியர் பு.ரவிராஜன் ஆகியோர் பேரவையினால் தேடற் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனராம்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கை இம்மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் இம்மாதம் 15 ஆம் திகதி பத்திரிகைகள் வாயிலாகக் கோரப்பட்டிருந்தது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி ஆகும்.

சுற்றறிக்கையின்படி துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் பேரவையினால் தேடற்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவுக்கு அனுபவமும், ஆளுமையும் மிக்க சிரேஸ்ட பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனால், அவர்களின் தேடலில் மிகப் பொருத்தமானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments