கிழக்கை சுருட்ட கமல் குணரட்ண?


கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார். 


மகாசங்கத்தினரிடம் நேற்று (22) கருத்துத் தெரிவிக்கும்போதே,  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கிழக்கு முழுமையாக சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகவுள்ளமை உறுதியாகியுள்ளது..
இதனிடையே வவுனியா – வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக புதிய பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (22) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த போதிலும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழக்கு இலக்கம் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

புதிய பிரிவின் கீழ் வழக்கு அழைக்கப்பட்டருந்தது. அதன்படி ஆஜராகிய மூவரையும் தலா 50 ஆயிரம் பெறுமதியான சரீரப் பிணையில் நீதிவான் விடுவித்திருந்ததுடன், எதிர்வரும் 9ம் மாதம் பத்தாம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தாம் முன்னைய வழக்கின் தவணைக்கே ஆஜராகிய நிலையில், புதிய பிரிவில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளமை தொடர்பாக தாம் அறிந்திருக்கவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் இதன்போது தெரிவித்திருந்தனர்.

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் வெடுக்குநாரி மலையில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கபட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்படது. குறித்த ஏணிப்படி பொருத்தியமைக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தினரை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்ததுடன், குறித்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தால் வவுனியா நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த பொலிஸார் படிகள் பொருத்தப்பட்ட விடயத்தில் ஆலய நிர்வாகத்தினரை கைது செய்யவேண்டும் என தெரிவித்திருந்தனர்.

எனினும் குறித்த ஆலயம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாமையினால் கைது செய்யமுடியாது என நீதிபதி தெரிவித்ததுடன், மூவரையும் தலா 50ஆயிரம்படி ஒரு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான சொந்தப்பிணையில் விடுவித்திருந்தார்.


No comments