ஒரு கடிதம் கையளிப்பதற்கு கூட்டமைப்பினர் கூட்டமாக மகிந்தவிடம் செல்ல வேண்டுமா? பனங்காட்டான்

மகிந்தவின் அலரி மாளிகை கூட்டத்துக்கு ஏழு எதிர்க் கட்சியினருள் தனித்துச் சென்றவர்கள் கூட்டமைப்பினரே. இவர்கள் முன்வைத்த
கோரிக்கைகள் எதனையுமே நிறைவேற்றுவேன் என்று மகிந்த உத்தரவாதம் அளிக்கவில்லை. நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட மறுக்கும் கோதபாய ராஜபக்சவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்பதைத் தெரிந்து கொண்டும் கூட்டமைப்பினர் கூட்டமாக மகிந்தவின் கூட்டத்துக்கு சென்றதால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?

இலங்கையின் நிகழ்காலம் என்பது மூன்று தலையாய பிரச்சனைகளைக் கொண்டதாகவுள்ளது. மூன்றுமே ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவையாகவும் உள்ளன.

முதலாவது, கொரோனா என்னும் உயிர்க் கொல்லி நோய். எண்ணுக்கணக்கில் இன்னும் ஆயிரத்தை எட்டாமையால் ஆபத்தில்லையென்று கூறினாலும், நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது, யூன் மாதம் 20ம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தல். இத்திகதியில் இது நடைபெறுமா அல்லது பிற்போடப்படுமா என்று ஏக்க நிலையிலுள்ளது.

மூன்றாவது, ஆயுள் முடிவடைவதற்கு ஆறு மாதத்துக்கு முன்னராக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்ட வேண்டுமா, இல்லையா என்ற கௌரவப் பிரச்சனை கலந்த போராட்டம்.

மேலே நான் குறிப்பிட்டவாறு, இவை மூன்றும் ஒன்றுடனொன்று இணைந்து பிணைந்த இடியப்பச்சிக்கல் போன்றவை. இவைக்கான இறுதித் தீர்வு ஒருவரிடம் மட்டுமே உண்டு. அவர், இலங்கையில் சர்வ அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட ஜனாதிபதி கோதபாய ராஜபக்சதான்.

ஜனாதிபதி என்ற பதவி வழியான தமக்குள்ள அதீத அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதம் 2ம் திகதி நாடாளுமன்றத்தை அவர் கலைத்தபோது, கொரோனா ஒரு பிரச்சனையாக தலைதூக்கியிருக்கவில்லை.

ஆனால், இப்போது இது அங்குமிங்கும் தொற்றி பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதால் எதிர்பார்க்கப்பட்டவாறு தேர்தலை நடத்தி, சட்டப்படி யூன் 2ம் திகதியான மூன்று மாதத்துள் அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையகம் ஒருபுறம், ஜனாதிபதி செயலகம் இன்னொருபுறம், அரசியல் கட்சிகள் மற்றொருபுறம். யூன் 20ம் திகதி தேர்தல் நடைபெறுமென்ற தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்புகூட ஒரு கண்துடைப்பாகவே தெரிகிறது. இல்லையென்றால், தேர்தல் எப்போது நடைபெறுமென்பதை கொரோனாதான் தீர்மானிக்குமென்று தேர்தல் ஆணையக தலைமை அதிகாரி மகிந்த தேசப்பிரிய கூறியிருக்க மாட்டார்.

கொரோனா கட்டுக்கடங்காது சற்று வேகம் கொண்டு வரும் இன்றைய நிலையையும் பொருட்படுத்தாது படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவதும், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கப் போவதாக அறிவிப்பதும், வணிக நிலையங்களை திறக்க முனைவதும், அலுவலகங்களை மீள ஆரம்பிப்பதும் மக்கள் தொடர்பாடலை அனுமதிப்பதும் தேர்தலை நோக்கிய முன்னெடுப்புகள் என்பது நன்கு தெரிகிறது.

நிலைமை சீரடைவது போன்று போக்குக் காட்டி, தேர்தலை யூன் 20ல் நடத்த ஜனாதிபதி செயலகம் தனித்து முனைப்புக் காட்டி வருகிறது.

ஆனால், புதியதொரு சட்டப்பிரச்சனை ஏற்பட்டது. தேர்தல் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொண்ட சில நாட்கள், அரச விடுமுறை தினங்களாக இருந்தமையால், அவை செல்லுபடியற்றவையென்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, சட்டமா அதிபரிடம் தேர்தல் ஆணையகம் ஆலோசனை கேட்டதற்கு, ஷசட்டப்படி செய்யுங்கள்| என்று சட்டமா அதிபர் அலுவலகம் அருமையானதொரு ஆலோசனை வழங்கியது.

சட்டத்தை விளக்கி உரிய பதிலை நேர்த்தியான வார்த்தைகளால் வழங்கக் கடமைப்பட்ட சட்டமா அதிபர் அலுவலகம், போனால் போகட்டும் என்பதுபோல சட்டப்படி செய்யுங்கள் என்று பதிலளித்தது என்றால் இதற்கு சட்டமா அதிபர் அலுவலகம் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

அடுத்துவரும் சில வாரங்களுக்குள் கொரோனாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் தேர்தல் நாளை தீர்மானிக்குமா, அல்லது ஜனாதிபதி செயலகம் இதனை கையாளப் போகின்றதா என்பது தெரிந்துவிடும்.

தேர்தலை யூன் 2ம் திகதிக்கு முன்னர் நடத்தாவிடின், நாடாளுமன்றத்தை மார்ச் 2ம் திகதி கலைத்தது செல்லுபடியற்றதாகும் என்பது ஏழு எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. இதனைச் சுட்டிக்காட்டிய இக்கட்சிகள் எழுத்து மூலம் கோதபாயவுக்கு அனுப்பிய கடிதத்தில் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கேட்டிருந்தனர்.

எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாதென்று உடனடியாக எழுத்து மூலம் பதிலளிக்கப்பட்டது. அதேசமயம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அலரி மாளிகையில் ஒரு முக்கிய கூட்டத்துக்கு மகிந்த ராஜபக்ச பிரதமர் என்ற தோரணையில் அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி.யும் சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்திக் கூட்டணியும் இதனை உடனடியாகவே நிராகரித்தன.

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி பங்குபற்றுவதாக அறிவித்தது. இதன் சகபாடிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பங்குபற்றுவதாக அறிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி பல்டி அடித்துவிட்டது.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கடிதம் எழுதிய ஏழு எதிர்க்கட்சிகளுள் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பே. எந்தக் கட்சிகளையும் சாராத பௌத்த பிக்குகள் பலர் அலரி மாளிகைக் கூட்ட முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். (சிங்கள பௌத்த நாட்டில் அவர்களுக்குத்தானே முதலிடம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை).

நாடாளுமன்றத்தைக் கூட்ட தவறினால் நீதிமன்றம் செல்வோமென அச்சுறுத்தி வந்த கூட்டமைப்பு, ஏழு கட்சிகளுடன் இணைந்து கடிதம் அனுப்பிய கூட்டமைப்பு, இறுதி நேரத்தில் தனித்து அலரி மாளிகைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏன் முடிவெடுத்தது? இதுவே பலரையும் வியப்பில் ஆழ்த்திய கேள்வி.

பத்தாண்டுகள் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது கூட்டமைப்பு அவர்களுடன் நடத்திய சந்திப்புகள், விடுத்த வேண்டுகோள்கள், எழுதிய கடிதங்களுக்கு உருப்படியாக ஏதாவது நடைபெற்றதா?

கடந்த நான்கரை ஆண்டுகளாக மைத்திரி - ரணில் நல்லாட்சியில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாகவும்,  உத்தியோகப்பற்றற்ற பங்காளிக் கட்சியாகவும் இயங்கிய கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கும் வேண்டுகோள்களுக்கும் கிடைத்தது என்ன?

மொத்தத்தில் சிங்கள அரசாங்கங்களிடம் மாறிமாறிக் கேட்டும் பெறமுடியாதவைகளை, அலரி மாளிகைக் கூட்டத்தில் பெற்றுவிடலாமென கூட்டமைப்புக்கு எவ்வாறு நம்பிக்கை வந்தது?

கூட்டமைப்பினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதானது மகிந்தவுக்குக் கிடைத்த பெரும் அரசியல் வெற்றி. இதனை அவரின் நன்றி தெரிவிப்பினூடாக அறிய முடிகிறது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஒப்பமிட்டு மகிந்தவிடம் கையளித்ததை ஊடகங்கள் பிரமாதப்படுத்தியுள்ளன. ஆனால், இக்கடிதம் வழக்கம்போல குளிர்சாதனப் பெட்டிக்குள் சென்றுவிடும்.

நாடாளுமன்றத்தை மீளக் கூட்ட மாட்டேனென்று பதிலளித்த கோதபாயவை மீறி, எதனையும் செய்ய முடியாத நிலையிலிருக்கும் மகிந்தவை சந்திப்பதும் கடிதம் கொடுப்பதும் அரசியல் நாடகமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

கூட்டமைப்பினர் கூட்டமாக இக்கூட்டத்துக்குச் சென்றதற்கு சில காரணங்களை அறிய முடிகிறது.

நல்லாட்சி அரசாங்கம் சம்பந்தனுக்கு கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்வரை இலவசமாக வழங்கிய விசாலமான வீட்டை கோதபாய அரசாங்கமும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்தது. மகிந்தவின் அழைப்பை ஏற்று அலரி மாளிகை கூட்டத்துக்குச் செல்லத்தவறின் அந்த வீடு பறிக்கப்படலாமென சம்பந்தன் எண்ணியிருக்கலாம்.

இக்கூட்டத்தை நிராகரித்தால், கூட்டமைப்பு தொடர்ந்தும் ரணிலுடன் இணைந்தே அரசியல் பயணம் செய்வதாக கோதபாய தரப்பு எண்ணக்கூடுமென சம்பந்தன் நினைத்திருக்கலாம்.

அடுத்த தேர்தலில் மகிந்தவே மீண்டும் பிரதமராக வரவிருப்பதால் அவருடன் இணைங்கிப் போவது தங்கள் அரசியலுக்கு அனுகூலமாக இருக்கலாமென சம்பந்தன் கருதியிருக்கலாம். மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி.யும் கூட்டமைப்பின் பிரமுகர்களில் ஒருவருமான அரியநேந்திரன் இதனை உறுதி செய்யும் கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். அடுத்த பிரதமராகவும் மகிந்தவே வரவிருப்பதால் அவருடன் பகைத்துக் கொள்ள கூட்டமைப்பு விரும்பவில்லையென்பது இவரது கருத்து.

2018ல் மகிந்தவை பிரதமர் கதிரையிலிருந்து இறக்கி ரணிலை மீண்டும் அதில் அமர்த்த கூட்டமைப்பு செயற்பட்ட கசப்புணர்வை மகிந்தவிடமிருந்து நீக்குவதற்கு இச்சந்திப்பை ஓர் ஆயுதமாக கூட்டமைப்பு பயன்படுத்தியிருக்கலாம்.

அதேசமயம் அலரி மாளிகைக் கூட்டத்தில் பங்குபற்றியது தமிழ் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துமென்பது கூட்டமைப்புக்குத் தெரியாததல்ல. அதனால்தான் மறுநாள் 5ம் திகதி மகிந்தவை இவர்கள் தனியே சந்தித்து தமிழ் மக்களின் வெவ்வேறு பிரச்சனைகள் பற்றி உரையாடியதோடு அதனை ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தவும் நேர்ந்தது.

இச்சந்திப்பின்போது பலவேறு கோரிக்கைகளை கூட்டமைப்பினர் முன்வைத்தவேளை எதற்கும் உறுதி கூறாத மகிந்த, ஆகட்டும் பார்க்கலாம், கவனிக்கிறேன், நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பாணியில் பதிலளித்துத் தப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரியபோது, ஷஅது ஜனாதிபதியின் அதிகாரத்துக்குட்பட்டது| என்று கூறியதோடு அவரிடம் பேசுகிறேன் என்று மட்டும் பதிலளித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசும்போது, 'இப்போது ஜனாதிபதி மகிந்த அல்ல, நான்தான் ஜனாதிபதி, எனது உத்தரவுகளையே நிறைவேற்ற வேண்டும்" என்று கோதபாய தெரிவித்தது மகிந்தவுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது போலும். 

மொத்தத்தில் மகிந்தவுடனான இரண்டு நாள் சந்திப்பும் எதனையும் பெற்றுத்தரப் போவதில்லை. எதனையும் சாதிக்கப் போவதுமில்லை. மகிந்தவே இந்த சந்திப்பின் பயனை அறுவடை செய்யவுள்ளார்.

ராஜபக்சக்களை நன்கு தெரிந்து கொண்டும் இக்கூட்டங்களில் பங்குபற்றியதால் கூட்டமைப்பு எதனையும் தங்களுக்கு சாதமாக்கும் சந்தர்ப்பம் அறவேயில்லை.

தபால் மூலம் அனுப்பியிருக்க வேண்டிய ஒரு கடிதத்தைக் கையளிப்பதற்காக, கூட்டமைப்பினர் கூட்டமாக அலரி மாளிகைப் படியேறி மகிந்தவை சந்தித்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த இடமில்லை. இதற்கான பதிலைப்பெற காத்திருக்க வேண்டிய தேவையுமில்லை.

No comments