35ஆயிரத்தினை கடந்த கொரோனா தொற்று! மேலும் 2 வாரத்துக்கு முடக்கநிலை நீடிப்பு!

இந்தியாவில் தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் மே 3 வரை அமல்படுத்தப்பட்ட முழு முடக்க(LOCK DOWN) நடவடிக்கையை தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொற்று பரவல் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு என மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கணிசமான தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக குறிப்பிட்டிருந்த கட்டுப்பாடுகளான மாநிலங்களுக்கிடையேயான அனைத்துவகையான போக்குவரத்து தடையும் இந்த இரண்டு வாரக் காலகட்டங்களில் நீட்டிக்கப்படும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்; விடுதிகள் மற்றும் சிறு உணவகங்கள் உட்பட விருந்தோம்பல் சேவைகள்; சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள் , உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பெரிய பொதுக் கூட்டங்களும் மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், சமூக, அரசியல், கலாச்சார மற்றும் பிற வகையான கூட்டங்கள் மற்றும்,மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியையும் அரசு மறுத்துள்ளது.
இன்று நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கக்கூடிய புலம் பெயர் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துவரச் சிறப்பு ரயில் போக்குவரத்தினை அனுமதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள், மக்களின் "நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக" என மத்திய அரசு கூறுகிறது. இந்த இரண்டு வாரக் காலகட்டங்களில் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
144 தடை உத்தரவு பயன்படுத்தி இத்தகைய கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்த முடியும். பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் நோயுற்றவர்கள், 65 வயதிற்கு அதிகமானவர்கள், கர்ப்பிணிகள், மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளி நோயாளிகளுக்கான (OP) மருத்துவ விடுதிகள் மற்றும் மருத்துவ மையங்கள் அனைத்து மண்டலங்களிலும் சமூக விலகல் மற்றும் இதர சுகாதார முன்னேற்பாடுகளுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக அத்தியாவசியமான நடவடிக்கைகள் தவிர வேறு எதுவும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அனுமதிக்கப்படமாட்டாது. தொடர் கண்கானிப்புடன் வீடு வீடாக சுகாதார பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
பொருட்கள் கொண்டு செல்வதற்கு எவ்வித முன் அனுமதியும் பெற வேண்டிய அவசியமில்லை. மாநிலங்களுக்கிடையே பாஸ் இல்லாமல் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆட்டோக்கள், ரிக்சாக்கள், வாடகை கார்கள், மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துகள், முடி திருத்தும் கடைகள், அழகு சாதன மையங்கள் போன்றவற்றுக்கு இயங்க அனுமதி இல்லை.
சிவப்பு மண்டலங்களில் ஓட்டுநரைத் தவிர இருவர் கார்களில் பயணிப்பதற்கும், இரு சக்கர வாகனங்களில் ஒருவர் பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments