சுடரேற்றி அஞ்சலிக்க பேரவையும் அழைப்பு?


முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.


மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவு தினத்தினை தமிழ் தேசமும் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளும் நாளை திங்கட்கிழமை (2020 மேஇ 18) நினைவேந்தவுள்ளன.

வெற்றுக்கோசமாகிப்போன பொறுப்புக்கூறல்இ சர்வதேச விசாரணை மற்றும் உலகப் பெரும் தொற்றாகிய கொரோனோ என்பவற்றிற்கிடையில் நாம் இம்முறை இந்த நினைவு தினத்தினை எதிர்கொள்கின்றோம்.

தமது சுதந்திரமான வாழ்வியலுக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய தமிழ் மக்களின் மூன்று தசாப்தகால விடுதலைப்போர்இ பல்லாயிரம் மக்களின் சாட்சிகளற்ற படுகொலைகளோடு மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகள் எந்தவிதமான காத்திரமான அரசியல் தீர்வுகள் இன்றி கடந்துவிட்டது.

 2009 மே மாதம் 18ம் திகதியில் இந்த விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தமிழர் தாயகப் பகுதியில் பல இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பில் வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் ஓர் குறுகிய நிலப்பரப்புக்குள் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த நாட்களில் ஒருவேளை உணவுக்காக கஞ்சியுடன் உயிரைக் கையில் பிடித்தபடி தமிழ் மக்கள் பட்ட சொல்லொணாத் துன்பம் வார்த்தைகளால் வடிக்க முடியாது. இந்த வகையில் வருடா வருடம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது தமிழ் மக்களால் பேரெழுச்சியாக உணர்ச்சியுடன் நினைவுகூரப்பட்டு வருகின்றது. இம்முறையும் தமிழ் மக்களாகிய நாம் கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு எமது வீடுகளில் இருந்தவாறே இந்த நினைவேந்தலை எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்க வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் பொறுப்புக்கூறலுக்காக பல இனங்கள் சமூகங்கள் நீண்டகாலம் காத்திருக்க போராட வேண்டியிருந்தமை கண்கூடு. அதே போலவே நாமும் எமக்கான நீதி கிடைக்கும்வரைக்கும்  காத்திருக்கவும்இ கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும்இ வளங்களையும் சிறந்தமுறையில் பயன்படுத்தி மாறுகின்ற பூகோள ஒழுங்கிற்கமைய அகிம்சை வழியில் போராடவும் வேண்டும் என்பதோடு இதை அடையும்வரையும் இனத்திற்கான நியாயம் கிடைக்கும் வரைக்கும் ஓயாது செயற்படவும் இவ்வகையான நினைவேந்தல்கள் அவசியமானவையும் வரலாற்றை ஊடு கடத்துபவையாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 அத்துடன் அடுத்த தலைமுறையினருக்கும் எமது வரலாற்றை கடத்துவது எதிர்காலத்தில் இவ்வாறான சூழல்களை அவர்கள் எவ்வாறு அணுகவேண்டும் அவற்றை எவ்வாறு கையாண்டு எமது நியாயங்களை நிலைநிறுத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும்.

 அந்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினாலும் ஏனையோராலும்  வேண்டப்பட்டவாறு அன்றைய தினம் நாம் அனைவரும் ஒற்றுமையாகவும் ஒருமித்த உணர்வோடும் வலிமிகுந்த நாட்களில் தமிழ் மக்கள் பட்ட வலிகளின் அடையாளமாக ஒரு வேளை உணவாக கஞ்சியை குடித்து அந்த மக்கள் அன்றைய நாட்களில் பட்ட துன்பத்தை நினைவுகூர்வதுடன் மாலை 06 மணி தொடக்கம் 07 மணி வரையான காலப்பகுதியில் சுடரேற்றி நினைவேந்தலினை மேற்கொள்வோம் என தமிழ் மக்கள் பேரவையினராகிய நாம் வேண்டி நிற்கின்றோம்

No comments