ஐபிசி:காட்டியும் கொடுக்கிறது - கூட்டியும் கொடுக்கிறது?


ஐபிசி தமிழ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ககனா என்ற சிங்கள மொழி செய்தி வலைத்தளம், திருகோணமலையில் செயற்பட்ட தமிழ்
உணர்வாரள்களை காட்டிக்கொடுத்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் உளவுத்துறையை தமிழ் அடிமட்ட ஆர்வலர்களை வேட்டையாட தூண்டுவதற்கான அறிக்கையிடல்களை ஜபிசியின் சிங்கள இணையமான ககணா முன்னெடுத்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே 18 அன்று மூன்று தமிழர்களின் கணக்குகளில் பகிரப்பட்டதாகக் கூறப்படும் சமூக ஊடக செய்திகளின் ஸ்கிரீன் சொட்களுடன் ககனா செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்கால் நினைவேந்தல் மூன்று நபர்களின் வாழ்க்கையை, குறிப்பாக அவர்களில் ஒருவரின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக திருகோணமலையினை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் “பயங்கரவாதத்தை” ஊக்குவிப்பவர்கள் என குறித்த தமிழ் இளைஞர்களை பற்றி செய்தி பதிவுகளை பகிர்ந்ததாக சிங்கள செய்தி இணையம் குற்றம் சாட்டியுள்ளது.

அதிலும் இதன் ஊடாக தமிழ் இளைஞர்கள் "புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரிடமிருந்து" பணம் சம்பாதிப்பதாக அது மேலும் கூறியுள்ளது.

ககனா மூன்று கணக்குகளின் பேஸ்புக் இடுகைகளின் ஏழு ஸ்கிரீன் சொட்களை வெளியிட்டுள்ளது.

திருமலையின் முதூர் பிரதேச செயலர் பிரிவின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள சேருவில பிரிவின் தெஹிவத்த கிராமத்தைச் சேர்ந்த கடுமையான சிங்கள காலனித்துவவாதிகள் மற்றும் தமிழ் இளைஞர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட தகராறின் பின்னர் இந்த செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மூதூரில் உள்ள மீன்காமம் மற்றும் சேருவிலவில் உள்ள தெஹிவத்தா இடையே அமைந்துள்ள அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தெஹிவத்தாவைச் சேர்ந்த பன்னிரண்டு சிங்கள குடியேற்றவாசிகள் பறிமுதல் செய்ய முயன்றனர். கடந்த மே 05 அன்று நடைபெற்ற இம்மோதல் நீதிமன்றிற்கு சென்றுள்ளது.

இலங்கை காவல்துறை மோதலில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்த முடிந்த பின்னர், கடுமையான சிங்கள குடியேற்றவாசிகள், நில உரிமைகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்களை குறிவைத்து இராணுவ உளவுத்துறையினை ஈடுபடுத்தி புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர்.

மே 18 நினைவு தொடர்பான பதிவுகளை ஆயிரக்கணக்கான தமிழர்கள் பகிர்ந்துகொண்டிருந்தபோது, குறித்த அறிக்கை ஒரு குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்களை ஏன் குறிவைத்தது என கேள்வி எழுந்துள்ளது.

இதுபோன்ற ஒரு மோசமான செய்தி தமிழரிற்கு சொந்தமான ஊடகங்களில் வெளிவருவதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது என்று கொழும்பில் உள்ள பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். தமிழ் அல்லது தமிழர் அல்லாத, பெருநிறுவன நலன்களைக் கொண்ட ஏமாற்றுக்காரர்களிற்கு சொந்தமான பெரும்பாலான ஊடகங்கள் ஒரே மாதிரியாக நடந்து கொள்கின்றன என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ககனா கொழும்பில் உள்ள டொமைன் பெயர் பதிவேட்டில் ஐபிசி தமிழ் லிமிடெட் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிசி தமிழ் ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட லண்டன் தமிழ் மீடியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த பாஸ்கரன் காண்டியா அல்லது கரண் ஐபிசி தமிழின் தலைவராக உள்ளமை தெரிந்ததே.
.

No comments