சுரண்டுவதற்கு மிச்சமில்லை?


கிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கபடும் என கோத்தபாயா ராஜபக்சே அறிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் தொன்மைகள் மற்றும் தொன்மைச்சான்றுகளை அழித்து பௌத்தமயமாக்கலை செய்து வருகிறது .குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் . திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள் . மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள் . இந்த ஆக்கிரமிப்புகளில் சில,

1. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன் மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட இப்போது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

2. இலங்கைத்துறை முகத்துவாரம் என்கிற திருகோணமலையின் பூர்விக தமிழ் கிராமம் இப்போது தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு லங்காபட்டன (Lanka Patuna) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது

3. பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த இந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.கடந்த வரலாற்று காலத்தில் கோயில் கொண்டிருந்த பிள்ளையார் ஆலய கோவிலின் அத்திபாரம் மட்டும் தான் இன்று உள்ளது .

4. பாடல் பெற்ற சைவ தளமான திருக்கோணேஸ்வரம் கோவில் சூழலில் மேற்கொள்ளப்படும் சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் தடை செய்து வருகிறது

5. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

6.மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயத்தை புனரமைக்க புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் சொல்லுகிறது

7. மட்டக்களப்பு மாவட்டம் பூர்விக தமிழ் பகுதியான வாகனேரியில் பல்வேறுபட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது
8. மட்டக்களப்பு மாவட்டம் புளுகுணாவை பகுதியில் பல இடங்களை தொல்லியல் திணைக்களமும் புத்த பிக்குகளும் உரிமை கோரி வருகிறார்கள்

9. மட்டக்களப்பு கோட்டை (Batticaloa Fort) அமைத்துள்ள இடத்தில றுகுணு அரசுக்கு சொந்தமான பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது

10 . மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பகுதியில் பௌத்த மதம் சார்ந்த பல சான்றுகள் கிடைத்து இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது

11. மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள சுவாமிமலை அடிவாரத்தை புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் பௌத்த மதத்திற்கு உரிய இடம் என அடையளப்படுத்தி இருக்கிறார்கள்

12. மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் தொல்லியல் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து 7 விகாரைகளை அமைத்து இருக்கிறார்கள்

13. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள வில்லுதோட்டம் தனியார் காணியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என தொல்லியல் திணைக்களம் உரிமை கொண்டாடுகிறது

14. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பூர்விக வாழ்விடங்களில் 86 இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளும் /விகாரைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன . இதில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும் ஆலையடி பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 இடங்களும் அட்டாளைசேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும் கல்முனையில் 2 இடங்களும் அடங்கும்

15. கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12,000 ஏக்கர் காணிகள் தீகவாவி புனித பூமிக்கு சொந்தமான நிலம் என தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது
தொல்லியல் திணைக்களம் மூலம் பௌத்த மத அடையாளங்களை திணிப்பதும் அதன் மூலமாக சிங்கள ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதும் கடந்த 70 ஆண்டுகாலமாக சிங்கள ஆட்சியர்கள் தமிழ் சிறுபாண்மை சமூகங்களுக்கு எதிராக கையாண்டு வரும் மோசமான தந்திரமாக இருந்து வருகிறது . அந்த வகையில் கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் பௌத்த மகா சங்கத்தின் வழிகாட்டலில் இராணுவ அதிகாரிகள் தலைமையிலான ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி பௌத்த மதத்திற்கு சொந்தமான தொல்லியல் இடங்கள் என பூர்விக தமிழ் கிராமங்களில் இருந்து அப்பாவி தமிழ் குடும்பங்களை வெளியேற்றி கிழக்கு மாகாணத்தை பௌத்த மயமாக்கி , சிங்கள குடியேற்றங்களை பாரிய அளவில் செய்ய முயற்சிக்கிறார்கள்

No comments