ஏ-9 ஏரம்பு எழுதிய ''வலி சுமக்கும் நாட்கள். . .'' அனுபவப் பகிர்வு - 3

அடுத்த கட்டமாக வள்ளிபுனத்தை நோக்கி நகர்ந்தோம்.
உடையார்கட்டு-இருட்டுமடுவில் இராணுவத்திடம் சிக்கிய சிறு தொகை
மக்கள் தவிர ஏனைய வன்னிமக்கள் அனைவரும் வள்ளிபுனம் பகுதியை நோக்கி நகரத்தொடங்கியிருந்தனர். தெரிந்தவர் ஒருவரின் வீட்டிலும், காணியிலுமாக சுமார் 6 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் வரையிலும் குடியிருந்தோம்.

அங்கிருந்த பத்து நாட்களில் முதலிரண்டு நாட்களைத் தவிர ஏனைய நாட்கள் அனைத்துமே நாளாந்த எறிகணைத்தாக்குதல்களால் அதிர்ந்தன. வள்ளிபுனத்தில் அமைந்திருந்த கண்பார்வை, செவிப்புலன் அற்ற மாற்றுத்திறன்கொண்ட சிறியோர்களுக்கான இனியவாழ்வு-இல்லம் மற்றும் பெற்றோர்களை இழந்த ஏற்கெனவே சுனாமியில் பச்சிளம் உயிர்களைப் பறிகொடுத்த செந்தளிர் சிறுவர் இல்லம் உட்பட  பல இடங்கள் புத்தனின் படைகளின் கண்மூடித்தனமான இலக்குகளாக உயிர்களையும் உடமைகளையும் காவுகொண்டன. கூடவே பல்குழல் எறிகணைவீச்சுகளும்
சேர்ந்து பௌத்த காருண்யத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. நாங்கள் தங்கியிருந்த காணியிலும் எறிகணைகள் வீழ்ந்தபோதிலும் அந்நேரத்தில் அனைவரும் மூடிய காப்பரணுக்குள் 40 பேர்வரை இருந்ததனால் சேதம் வீட்டின் ஒரு பகுதியோடு போனது. பக்கத்து வீட்டில் குற்றுயிரான ஒரு தந்தையைச் சாக்கிலே அள்ளியெடுத்துக்கொண்டு மருத்துவரிடம் எடுத்துச்சென்றது பயனளிக்கவில்லை.

சில வீதிகளே பயன்பாட்டுக்கு உதவாத வகையில் பெருங்குழிகளோடு காயப்பட்டுக் கிடக்கையில் மனித உடல் எம்மட்டும் தாங்கும் !
ஆங்காங்கே சந்திகளில் காலையில் கண்சிமிட்டும் அவசரச்சந்தைகளில் மரக்கறி, மீன் வாங்குவது , விடுபட்டுப்போன உறவினர்களை விசாரித்துத் தேடுவது தவிர மற்றையபடி வெளியில் திரிவதை முடிந்தவரையில் அனைவரும் தவிர்த்தனர். கைவேலிக்காட்டுப்பகுதியால் முல்லை-முதன்மை வீதியைக் கைப்பற்றுவதற்காக இராணுவம் கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தது.

தமது முன்னேற்ற முயற்சிக்கு முன்னதாக மோசமான பல்குழல்-எறிகணைவீச்சினை அது மேற்கொண்டது. ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியின்படி ஒரு தடவை பல்குழல்-எறிகணை வீச்சினை மேற்கொள்வதற்கு 16 இலட்சம் ரூபா செலவழிவதாக அறிந்தேன்.

தேன்கூடு போன்று 
வாழ்ந்துவந்த தமிழினத்தை அழிப்பதற்காக வஞ்சம்கொண்டு வரித்துக்கட்டிக்கொண்டு வந்திருக்கும் சிங்களம் தான் கரியாக்கும் பணத்தைச் சிங்கள மக்களின் வாழ்வாதாரத்திற்காக முதலிட்டால் மத்திய கிழக்கில் மலினப்பட்டுப் போயும் தத்தம் குடும்பங்களுக்காக வலிசுமக்கும் இலட்சக்கணக்கான சிங்களச்சகோதரிகளின் வாழ்வு மலருமல்லவா ? ஆனால், இதையொட்டி சாதாரண சிங்களப்பொதுமக்கள் சற்றேனும் சிந்தித்தாலும் இலங்கைத்தீவின் வரலாறே வேறுமாதிரி மலர்ந்திருக்கும்.
ஆக்கிரமிப்பு வெறியில் தம் சிதைவினைப் பற்றிச் சிந்திக்காமல் விகாரமாதேவியின் ஊட்டல் அவர்களை உசுப்பேற்றி வைத்திருப்பது வேதனையான உண்மை. எப்படியோ முல்லை வீதியைக் கைப்பற்றி விடுவதிலே சிங்களம் மிகத்தீவிரமாயிருந்தது. கோலியாத்தின் இக்கொடூரத்திற்குப் பதில் கொடுப்பதாக தாவீதின் தாக்குதல் இருந்தது. 

ஈழத்தமிழினின் இருப்பை இல்லாதொழிப்பதற்கான
 சிங்களத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு, புலிகளின் உள்த்தயாரிப்பான சண்டியன் அவ்வப்போது பதிலளித்தது.

காப்பரண்களுக்குள் எதிரியின் தாக்குதல்களைக் கேட்டு நடுங்கிக்கொண்டிருக்கும் மக்கள், சிறிதுநேரத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 என்று மிகப்பலத்த சத்தத்துடன் கிளம்பிச்செல்லும் சண்டியனின் சத்தத்தை உணர்ந்து „இப்ப அடங்கிடுவாங்கள் பாருங்கோ !“ என்று குதூகலிப்பார்கள். அதைப்போலவே எதிரியின் அன்றைய தாக்குதலும் அத்தோடு ஒத்திவைக்கப்படும். கேள்விப்பட்ட வரையில் நகைச்சுவையாகப் பெயர் சூட்டப்பட்ட தமிழனின் இச் சண்டியன் ஆனது ஓடுதளத்தில் ஓடிச்சென்று 3-4 கி.மீ. இலுள்ள எதிரியின் இடத்தைத் துல்லியமாகத் தாக்கவல்லது.
ஓடுதளத்தில் ஓடிச்சென்று பறக்கவைக்கவேண்டிய தேவை இருந்ததனால் சற்றே வெளியான இடத்தில் வைத்துஇடம்மாற்றி இடம்தேடி எதிரியின் வேவுவிமானத்தின் கண்ணில்படாதவாறு தாக்குதலை மேற்கொள்வதில் இயக்கத்திற்குச் சவால்கள் இருந்தன. பெரும் எண்ணிக்கையில்
இதனை உற்பத்திசெய்யும் வளவசதிகள் இல்லாதபோதிலும் வெற்றிகரமான மாதிரியினை வடிவமைத்து சிறு தொகையில் அவ்வப்போது ஈடுபடுத்தியிருந்தமை தமிழர்களின்
தற்சார்பு வல்லமைக்குச் சான்றாகின்றது.

நாட்களின் நகர்வில் எதிரியின் கையாலாகாத தன்மை மோசமான கண்மூடித்தாக்குதல்களாக வெறிகொள்ளத் தொடங்கியிருந்தன. காப்பரண்களை விட்டு வெளியே வரமுடியாத நிலமை தோன்றவே, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு எல்லோரும் உச்சரித்த தேவிபுரத்திற்கு நாங்களும் இடம்பெயர்ந்தோம். மீண்டும் அடியடியாக அனைத்துத் தமிழனும் வாழ்வுதந்த வன்னியின் பகுதியிலிருந்துவலியுடன் விடைபெறமுடியாத புதிரான உணர்வுடன் கடந்தனர். 

முல்லைவீதி எதிரியின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளான காரணத்தினால் பின்னாலுள்ள காட்டுப்பாதையினையே அனைவரும் பயன்படுத்தினோம். வாகனப்போக்குவரத்துக்கு உதவாத பள்ளங்குழிகள்
, காட்டாறுகள் எல்லாவற்றையும் கடந்து 4-5 கி.மீ தூரத்திலுள்ள தேவிபுரத்தை 7 மணித்தியாலத்தில் அடைந்தோம். எல்லோரும் பாதுகாப்பான பகுதியென நம்பி வந்த தேவிபுரத்தை அடைந்தபோதே இராணுவத்தின் எறிகணைகள் எம்மைக் கடந்துசென்று ஆங்காங்கே வீழ்ந்து வெடித்தன. இதற்கு மேல் எங்கே செல்வதென்ற முடிவோ என்னவோ எவரும் அவற்றைச் சட்டைசெய்யாது தத்தம் பொருட்களை இறக்கி காப்பரண்களை அமைப்பதிலே சுறுசுறுப்பாயிருந்தனர்.
தேவிபுரம் என்ற சிறிய பகுதியிலே தெரிந்த அநேகமானோரை மீண்டும் கண்டதிலே மனதிற்கு ஆறுதலாயிருந்தது. அங்குகூட ஆச்சிதோட்டம் என்ற தென்னந்தோப்புக்காணியே அனைவரின் குடியிருப்புக்கும் மடி கொடுத்தது. அன்று இருட்டிவிட்டிருந்ததினால் எவரோ கைவிட்ட காப்பரணுக்குள் இரவைக் கழித்துவிட்டு விடிந்த பின்னால் குடியிருக்க ஏதாவது கொட்டிலைப் போடலாம் என்று முடிவெடுத்தோம். யாரோ தாம் அமைத்த காப்பரணை விட்டுவிட்டு வேறிடம் சென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கொரு காரணம் இருந்திருக்கவேண்டும் என்பது
அடுத்த நாளே புரிந்தது.

சில மணித்தியாலங்களில் விடிந்தது. அதிகாலையிலே அச்சுற்றாடலை ஓரளவு மட்டறிந்துகொண்டு பதுங்ககழியை அமைப்பதற்கு முனைகையிலே, அடுத்தகட்ட இடப்பெயர்விற்காகத் தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் நெருங்கி வந்து கூறினார்.

எனக்கு இந்தக் காட்டுப்பகுதியை வடிவாய்த் தெரியும். இதை எங்கட ஆக்கள் கனநேரம் தக்கவைக்கிறது சாத்தியப்படாது. உங்கட நிலமையைப் பொறுத்தவரையில் நீங்கள் புதுக்குடியிருப்பு-இரணைப்பாலை பக்கத்துக்குப் போறதுதான் இப்போதைக்குப் பாதுகாப்பாயிருக்கும்.“. அவருடைய கூற்றில் இருந்த கணிப்பை அடிமனம் விழுங்கிக்கொள்ளவேண்டி இருந்தது. ஏனெனில் இராணுவம் வெவ்வேறு தந்திரோபாயங்களைக் கைக்கொண்டு தமிழர் தாயகமண்ணை அபகரித்துக்கொண்டுவந்தது.
அதில் ஒன்றாக காட்டுவழியிலான தனது முன்னேற்ற நகர்வுக்கு எண்மரைக்கொண்ட  ´எயிற்-மென் ரீம்´ (8-அநn வநயஅ) பல முனைகளிலும் ஈடுபடுத்தப்பட்டன. கனரக சுடுகலன்களைக்கொண்ட எட்டு இராணுவத்தினரைக்கொண்ட அணிகள் காடுகளில் வெவ்வேறு முனைகளினூடாக நகரும். இதன்போது விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தவிர்க்கமுடியாதவையாக நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

இவ்வாறு இனங்காணப்படும் புலிகளின் நிலைகள்மீது தமது பின்னிலையிலிருந்து ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதலை இராணுவம் மேற்கொண்டது. கடுமையானதும் செறிவானதுமான அரச படைகளின் கனரகச்சூட்டினால் மட்டுப்படுத்தப்பட்ட ஆள்- மற்றும் போர்த்தளபாட வளங்களைக்கொண்ட புலிகளை முற்றுகைக்குட்படுத்திய சிறீலங்காப்படைகள் பல முனைகளில் முன்னேற முடியாமல் நீண்ட நாட்கள் இழுபட்டதுண்டு.

எனினும் வீரம் நிறைந்த புலிகளின் தாக்குதலிற்கு முகங்கொடுக்கமுடியாத சிறீலங்கா, குறித்த புலிகளின் பகுதி நோக்கி மிகச்செறிவான பல்குழல்-எறிகணைத்தாக்குதல்களையும் அவையும் கைகொடுக்காத சந்தர்ப்பங்களில் யுத்தவிமானங்களினாலும் தாக்குதல்களைத் தொடுத்து துவம்சம் செய்துவந்தன.
இதன் காரணமாகவே எத்தனை முனைகளைப் புலிகள் தக்கவைத்தபோதிலும் கைவிடப்படும் ஒரு முனையினூடாக (துவாரத்தினூடாக உள்நுழையும் நீரைப்போல) நுழையும் சிங்களத்திற்கு  முன்னேறிக்கொள்வது சாத்தியப்பட்டது. சகுனியும், கூனியும் இன்னும் பலரும் அணிசேர்ந்து ஆலோசனை வழங்க ஆக்கிரமிரப்புவெறியிலே தன்னுடைய இழப்பைப்பற்றிக் கணக்கிலெடுக்காது தமிழரை அழிப்பதற்காக சிங்களம் சகல யுத்தநியதிகளையும் மீறிச் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

இதன் ஓரங்கமாகவே புதுக்குடியிருப்பிலே குடியிருந்த மக்கள் பின்னாளிலே தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கைவேலிக் காட்டுப்பகுதியிலே தங்களின் ஒட்டுமொத்த படைவளங்களைப் பயன்படுத்தியும் முன்னேற முடியாத இராணுவம்மிகவும் கீழ்த்தரமான முறையிலே அக்களநிலையைத் தலைகீழாக்கியிருந்தது. வன்னிப் பிரதேசத்திலே அப்போது வாழ்ந்த மக்கள்தொகை குறித்து சிங்கள அரசு தெரிவித்த வஞ்சகக்கணக்கினை ஏற்று ஐ.நா. வின் குழு எனப்படும் உலக உணவுத்திட்டம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தெற்கிலிருந்து வன்னிக்கு எடுத்துவந்துஅது பலநோக்குக்கூட்டுறவுச் சங்கங்களினூடாக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. பொதுமக்களுக்குக் கிடைக்கும் சர்வதேசத்தின் இந்த உதவிநடவடிக்கைக்கு புலிகள் தம்முடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். போர்க்காலத்திலும் இது தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தது. கிட்டத்தட்ட 40-60 வரையிலான மூடப்பட்ட பாரவூர்திகளில் இப்பொருட்கள் எடுத்துவரப்பட்டன.
முன்னே ஒரு பெரும்பாலும் வெள்ளையினத்தவர் எஸ்கோட்-பாதுகாப்பு வழங்க இத்தொடரணி வந்துபோகும். இவற்றை ஓட்டிவருபவர்கள் பெரும்பாலும் சிங்கள இனத்தவர்களாக இருப்பினும் ஐ.நா.வின் செயற்றிட்டம் என்றளவில் அவர்களிடம் நேர்மையை எதிர்பார்த்து, புலிகள் அத்தொடரணிகள்மீது சோதனைகளை மேற்கொள்வதில்லை. இப்படியிருக்க கைவேலிப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இவ்வாகனத் தொடரணி காட்டை அண்டிய பகுதியிலே வாகனக்கோளாறு போலக் காட்டியவாறு குறிப்பிட்டளவு நேரம் நிறுத்தப்பட்டதையும், பின்னாலே நிறுத்தப்பட்ட பாரவூர்திகளிலிருந்து 200 வரையான ஆயுததாரிகள் படைத்தளபாடங்களைக் காவுபடுக்கையிலே வைத்துக்காவியவாறு காட்டுக்குள் ஓடியதைக்கண்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதாவது புலிகளை மீறி மேவ முடியாதவர்கள், வுசழதயளெ
குதிரைவடிவில் யார்யாராரோ ஆசியுடன் உள்ளே ஊடுருவப்பட்டு, பின்னிருந்து தாக்கும் நிலையைப் பெறுகிறார்கள். இவ்வஞ்சகம் குறித்து எந்தளவு மட்டும் எவரவர் அறிந்திருந்தார்கள் என்பது என்றோ ஒருநாள் வெளிவருமா என்பதே எவருக்கும் தெரியாது. ஆனாலும், சான்றாண்மை மிக்க ஈழத்தமிழனின் வீரம் 2009 இல் மண்ணை மீட்டுத்தரமுடியாமல் போனதற்கு எத்தனை சூழ்ச்சிகள் கைகொடுத்தன. என்பதை நாம் ஒவ்வொருவரும் சந்ததிகள் கடந்தும் அறிந்துவைத்திருப்பது அவசியமாகும்.
இப்படியான யதார்த்தத்துக்கு மத்தியிலே அங்கு மேலும் தங்குவதைத் தவிர்த்து இரணைப்பாலையை நோக்கி கிளம்பினோம். எங்கு பார்த்தாலும் மக்கள் திரள். எல்லோரும் ஏதோ நிலையற்றவராக அடுத்தகட்டத்திற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள். முல்லை-முதன்மைச்சாலையைக் குறிவைத்து இராணுவம் அடிக்கடி எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டு வந்ததால் அதனைத் தவிர்த்து பின்பக்கக் காட்டுப்பாதையே அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.

தேவிபுரம் நாம் விட்டுநீங்கும்போதும் அவ்வப்போது எறிகணைகளால் அதிர்ந்துகொண்டுதான் இருந்தது. காட்டுவீதியால்  ஓட்டோ போகுமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதற்கு நேரமில்லை. எல்லாத் தமிழரையும்போல சடப்பொருட்களும் எல்லாவற்றையும் தாங்கி மஞ்சள் ஆற்றின் எதிர்ப்பையும் கடந்து பயணித்துக்கொண்டிருந்தன. பாலங்கள் இல்லாத காட்டாறுகளைக் கடப்பதற்கு மனிதர்கள் தோள்கொடுத்து உதவினர். ''இது கொலைவலயம் தாமதிக்காமல் கெதியாய் போகப் பாருங்கோ'', இந்த பிக்ஸ் இற்கு அடிக்கடி அடிக்கிறவன்  ஒவ்வொருவரிடமும் இருந்து வந்த எச்சரிக்கைகள் எம்மை அவசரப்படுத்தின.

ஏதாவது பகுதிமீது தாக்குதல் நடாத்தி அது மக்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி அவனது நோக்கம் நிறைவேறியிருப்பின், அப்பகுதியின் பிக்ஸ் எனப்படும் ஆள்கூறு எதிரியின் விருப்பத்தெரிவாகி விடும். இதை ஒவ்வொருவரும் அனுபவத்திலே உணர்ந்திருந்தனர்.

திடீரென வானிலே தோன்றிய யுத்தவிமானங்கள் சில கி.மீ. தூரத்திலே நிலமதிரக் குண்டுகளை வீசிப் பெரும் தாக்குதலை மேற்கொண்டன. இரணைப்பாலை நோக்கி மேலும் விரைவாக நெருங்கினோம். அப்போதைக்கு அப்பகுதி ஒப்பீட்டளவில் வெறிச்சோடிக்கிடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
புதுக்குடியிருப்பின் ஒரு பக்கமாக அமைந்திருந்த இரணைப்பாலை நிழல்தரும் மரங்களை அதிகம் நெருக்கமாகக்கொண்ட பகுதி. இதன் பெயர் இரட்டைப்பாலை மரங்கள் காணப்பட்டதைக்கொண்டு எழுந்த காரணப்பெயர். இதேபோல செந்தூரன்-சிலையடி என்பதும் யுத்தகாலத்தில் அதிகம் பேசப்பட்ட ஓரிடமாகும்.

இந்தியப்படைகளின் ஆக்கிரமிப்புக்காலத்தில் வீரச்சாவடைந்த மாவீரன் செந்தூரனின் நினைவுச்சிலை எழுப்பப்பட்ட சந்தியே இவ்விடமாகும். இரணைப்பாலையை அண்மித்தபோதே எறிகணைகளால் பலிகொள்ளப்பட்ட ஆடுமாடுகள் ஊதிப்பெருத்து வெயிலில் காய்ந்திருந்த காட்சி, முல்லைவீதியினால் பிரயாணிக்க முற்பட்டுப் பலியான மக்களின் நிர்க்கதியை ஓரளவு வெளிப்படுத்தின.

ஆக இரணைப்பாலையில் தெரிந்தவர் ஒருவரின் காணியில் இடம் கிடைத்ததில் காப்பகழி அமைக்கும் வேலையைக் கவனித்தோம். சற்று முன்னே யுத்தவிமானங்கள் தாக்கியது டொக்ரர் பொன்னம்பல ஞாபகார்த்த வைத்தியசாலையை என்று  அறிந்தோம். 200 வரையான நோயாளிகள் படுக்கையிலேயே பலியெடுக்கப்பட்டது அறிந்து உள்ளம் கொதித்தது. ஆனால், ஒவ்வோர் இழப்பையும் மறக்கச்செய்யும் அளவிற்கு அடுத்தடுத்த இழப்புகள் தொடர்ந்துகொண்டிருந்தன.

விசுவமடுவில் காப்பகழி மேலதிகமாக அமைக்கப்பட்டதைப் போலன்றி, அதற்குள்ளேயே படுக்கக்கூடிய அளவிலே அமைப்பதுதான் தேவிபுரத்திற்கு அடுத்த கட்டமாக அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டது. திடீர்திடீரென மேற்கொள்ளப்படும்கண்மூடித்தனமான தாக்குதல்களின்போது எறிகணைகள் ஏவப்பட்டு வீழ்வதுவரையான குறுகிய கால அவகாசத்திற்குள் பாதுகாப்பு தேடுவது, எப்போதும் சாத்தியப்படாத காரணத்தினாலேயே இவ்வாறு செய்தனர்.

ஆக்கிரமிப்புப்படைகள் அதிகம் நெருங்கி வந்திருந்ததால் செல் ஏவப்பட்ட ஒலி கேட்டு 6-7 விநாடிகளுக்குள்ளேயே அவை வீழ்ந்துவிடும். இந்த ஏற்பாடு காரணமாகவே பல்லாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. 2008 வரை தமிழீழம் எங்கும் மரங்கள் வெட்டுவதைத் தடுப்பதற்காக நடைமுறையிலிருந்த கடுமையான நியதிகள் நீக்கப்பட்டு,பொதுமக்களின் பாதுகாப்புக்காக மரங்கள் வெட்டுவது அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பகழிகள் அமைக்கப்படுவது ஊக்குவிக்கப்பட்டது.

கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரும்போது கிடைத்த அவகாசம் போலன்றி, விசுவமடுவில் தொடங்கியது ஒவ்வொரு முறையும் கூடவே ஒவ்வொருவரும் எடுத்துவந்த பொருட்களை அவசரம் காரணமாக ஒவ்வொன்றாக கைவிட்டுச்செல்ல நேர்ந்தது. தமிழீழ நிர்வாகத்தில் இயங்கிவந்த நியாயவிலை வாணிபங்கள் உட்பட பலநோக்குக் கூட்டுறவுச்சங்கக்கடைகள், களஞ்சியசாலைகள் இராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாகின.

மாதங்களாக விவசாயம்
, பயிர்ச்செய்கை எல்லாம் ஆக்கிரமிப்புப்படைகளின் தாக்குதல்கள் காரணமாக ஸ்தம்பித்துப்போயிருந்த நிலையில், எஞ்சிய உணவுப்பொருட்களைப் ஓரளவு கையிருப்பில் வைத்திருந்த கடையுரிமையாளர்கள், விவசாயிகள் போன்றோரும்
அவற்றைத் தம்முடன் கூட எடுத்துச்செல்வதில் எதிர்நோக்கிய போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் சிக்கல்களை மனதிற்கொண்டு மலிவில் விற்க முனைந்தனர்.

இப்படியான சூழலில்தான் 3-4 நாட்களில் இரணைப்பாலை மக்கள் வெள்ளத்தால் நிரம்பிக்காணப்பட்டது. எங்கும் பரபரப்பு. உறவினர், தெரிந்தோரெனக் காயப்பட்டோரைத் தேடுவதுவிடுபட்ட உறவுகளை விசாரிப்பது என ஓய்வில்லாமலிருந்த மக்களின் உயிரைக்குடிக்கும் சிங்களத்தின் வெறியும் தீர்ந்ததாக இல்லை. நாமிருந்த காணியிலும் பல தடவை எறிகணைகள் வீழ்ந்து உயிர்களைப் பலிகொண்டிருந்தன.

எமது காப்பகழியை மூடியிருந்த தென்னைமரக்குற்றிகள் எறிகணையின் சிதறுதுண்டுகளைத் தாங்கிக்கொண்டிருந்தன. விமானக்குண்டுவீச்சுகளும் ஓய்ந்தபாடில்லை. எனினும் அன்றொருநாள் சற்றே வித்தியாசமான ஒலியுடன் புதுக்குடியிருப்பின் ஏதொவொரு பகுதியிலிருந்து வான்பரப்பிற்கு ஈழக்குரவியொன்று தன் இறக்கைகளை அடித்துச்சென்றது.

தாம் நேசித்த மக்களின் பாதுகாப்புக்காக, தாம் வரிந்துகொண்ட இலட்சியத்தின்படி வான்கரும்புலிகளாகக் கொழும்பிலுள்ள இராணுவத்தின் மையமொன்றைத் தாக்கச்சென்ற கேணல் ரூபன், லெப். கேணல் சிரித்திரன் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் அடுத்தநாட்காலை விடிந்தது. அன்றிலிருந்து 12 நாட்களாக எந்தவிதமான போர்விமானங்களும் வன்னிப்பகுதியில் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எறிகணைகள் ஓய்ந்தபாடில்லை.

அப்பகுதிக்கு இடம்பெயர்ந்து 10 நாட்களான நிலையில் மேலும் அங்கிருப்பது இயலாதென்ற சூழலில் அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்திலுள்ள ஆனந்தபுரத்திற்கு நகர்ந்தோம். தென்னங்குற்றிகள் பிரித்தெடுக்கப்பட்டு அடுத்த காப்பகழி புதிய இடத்தில் அமைத்த மூன்றாம் நாள் துப்பாக்கிச்சன்னங்களும் கீசத்தொடங்கியதால் அடுத்த இடப்பெயர்வு மிக விரைவாகவே அந்த அதிகாலையில் எம்மை நிர்ப்பந்தித்தது. 
குளிக்கும்போதும், காலைக் கடமையின்போதும், காப்பகழிக்கு முன்னால் இருந்தபோதும் வீழ்ந்த  எறிகணைகளின் சிதறுதுண்டுகள் சில அங்குலங்கள் மட்டுமே தள்ளி வீழ்ந்த தற்செயல்களைப்போல, எல்லாமே அரும்பொட்டாக வாழ்க்கையைத் தீர்மானிக்கத்தொடங்கியிருந்ததால் பொக்கணை, மாத்தளன் என கடற்கரையை நோக்கி மக்களோடு மக்களாக எல்லோரையும் போலவே எமது தலைவிதி அல்ல சர்வதேசச் சதிவிதியும் அமையட்டும் என்ற முடிவோடு அதிகாலைக்கும்மிருட்டில் அங்கிருந்து வெளியேறினோம்.
விடியாத அந்தக் காலையில் நிச்சயமற்ற உயிர்களைக் காவிக்கொண்டு எம் உடல்கள் நகரத்தொடங்கின. அதுவரை காலமும் இடம்பெயர்ந்த தருணங்களைப் போலன்றி புதுக்குடியிருப்பின் ஒரு பகுதியிலிருந்து விட்டுப்பிரிவது என்பது அதிகம் இதயத்தை அழுத்துவதாயிருந்தது. எனினும் அது தற்காலிகமானதே என்ற மனத்துணிவு மட்டும் அதிகம் நம்பிக்கையை இறுகப் பற்றியிருந்தது.

புதுக்குடியிருப்பு வெறுமனே ஓர் ஊர் என்பதற்கப்பால் அது எமது இனத்தின் எதிர்கால இருப்பு பற்றிய ஒன்றாகவும் அனைத்து நெஞ்சங்களிலும் ஆழப்பற்றியிருந்தது. இந்த நிலையில் எங்கேயென்று தெரியாமல் அடுத்த இராணுவ எல்லையாகிய வட்டுவாகலுக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரத்தில் எங்கேயாவது வாய்க்கும் இடத்தில் வாழ்விடத்தை அல்லது வாழ்ந்துவிட முயற்சிக்கும் இடத்தை அமைக்கலாம் என்பதே நினைப்பாயிருந்தது.

ஏற்கெனவே இடம்பெயர்ந்தவர்கள் மாத்தளன், பொக்கணை பகுதிகளில் அதுவரை தமிழினம் எண்ணிப்பார்த்திராத இடநெருக்கடிக்குள் ஒடுக்கமான கடற்கரை வெளிகளிலும்ஆங்காங்கு இடையிடையே வரண்டிருந்த சதுப்புநில வெளிகளிலும் தரப்பாள்களைக் கூரையாக்கி தத்தம் குடியிருப்புகளை அமைத்திருந்தனர்.

அதிகமானோர் ஏதோ தம்மிடம் இருப்பவற்றில் தவிர்க்கக்கூடியவை என்று கருதியவற்றை ஆங்காங்கு  விற்கும்வகையில் பாதையோரக்கடைகளை வைத்திருந்தனர். இன்னும் பலர்இராணுவத்தாக்குதலினால் கைவிடப்பட்டாலும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குட்படாத பகுதிகளுக்குள் சென்று தாக்குதலுக்குள்ளான கடைகளிலிருந்து பொருட்களை எடுத்துவந்து ஏதோவொரு விலைக்கு விற்றுத் தமது குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டனர்.

உயிராபத்து மிகுந்த சூழலில் இந்தத் திடீர் வியாபாரிகள் ஆற்றிய பங்கு பொருட்தட்டுப்பாடு ஏற்படுவதை ஓரளவு தாமதிக்கச்செய்தது. வழியெங்கும் கிளிநொச்சியிலிருந்து தெரிந்தவர் அறிந்தவர் என அநேகமானோரைக் காணமுடிந்தது. எல்லோரிடத்திலும் அசாதாரணமான இனமான உணர்வுடன்கூடிய தாங்குதிறனை அவதானிக்கமுடிந்தது.

வீரச்சாவுகளும் எதிரியின் கோரத்தாக்குதல்களினாலானபலியெடுப்புகளும் நாளாந்தம் அதிகரித்திருந்தபோதிலும்
, ஆக்கிரமிப்புவெறிகொண்ட சிங்களவனின் அன்றாட இழப்புகளை அறிகின்ற ஒவ்வொருவரும் அவனால் போரியந்திரத்தைத் தொடர்ந்தும் நீண்ட காலத்துக்குக் கொண்டு நகர்த்தமுடியாதென்ற கணக்கில் உறுதியாயிருந்தனர்.

அதாவது வாழ்வதற்காகத் தற்காப்புப்போரில் ஈடுபடும் தமிழினத்தின் அர்ப்பணிப்பிற்கு முன்னால், ஆதிக்கவெறிகொண்டு முன்னேறும் அராஜகப்படைகள் இழப்புகளைச் சந்தித்தவாறு தொடர்ந்தும் முன்னேறுவதற்கான தார்மீக நிர்ப்பந்தங்களைக் கொண்ட புறச்சூழல் இல்லை என்பதே.
நேசிக்கும் மக்களின் நிர்க்கதியான நிலையைக் கண்டு மனம் கனத்தபோதிலும் அவர்கள், முகத்திலே பிரகாசித்த கரிய உறுதி வேறெங்கினும் காணமுடியாதது. அவர்களைக் கடந்து போராளிகளைக் களமுனைக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களோடு காண்பவர் ஒவ்வொருவரின் இதயமும் தாய்மடியாகி கனத்தநெஞ்சுடன் விடைகொடுக்கும். புதுக்குடியிருப்பு மட்டுமன்றி நாலாதிசைகளும் நாளாந்தம் படுகளமாகிச் சிவந்திருந்த அன்றைய நாட்கள் ஒவ்வொன்றும் தமிழினத்தின் அடுத்தகட்ட எதிர்காலத்தை நிர்ணயிப்பவை என்பதை உணர்ந்திருந்ததாலே முழுத்தமிழினமும் கடற்கரையை ஒட்டிய அப்பகுதியிலே விடுதலைக்கான விரதம் ஏற்று நெருக்கடிகளுக்குப் பழகிவாழப் பயின்றிருந்தனர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி சர்வதேச நாசகார உளவியல் சகுனிகளின் சதிகளுக்கு இரையாகிய மானிடப்பலவீனங்களும் இடையிடையே இருக்கத்தான் செய்தன. அப்படியானவர்கள் பலிகொள்ள வருபவனின் விருப்பத்துக்குரிய விளம்பரப்பொருளாக அவனிடம் சென்றால் உரிமைகள் தேவையில்லை, உயிர்ப்பிச்சை கிடைக்கும் என்ற அங்கலாய்ப்பில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதும் உண்டு. எனினும் அச்சூழலையும் தமிழ்மக்களின் எண்ணிக்கையையும் வைத்துப்பார்க்கும்போது உலகவரலாற்றில் விடுதலைக்காகச் சிலுவை சுமந்த இனங்களில் தமிழர்க்கு மிகவுயர்ந்த இடம் உண்டு.
பதிவு இணையத்திற்காக
17-05-2020













No comments