உயிர்வதை ஓங்க உறவுகள் மாழ கோரத்தின் காட்சிகள் ஓங்கியதே!

ஓலத்தின் குரல்கள்
செவிவழி புகுந்து

இதயத்தின் அறைகளில்
ஒலிக்கிறதே! அன்று
ஞாலத்தில் நிகழ்ந்த
இனவெறி நெருப்பில்
தமிழினம் கருகியே
வெந்ததுவே!

முள்ளி வாய்க்காலில்
மனிதத்தை சிதைத்தே
நரபலி வேட்டைகள்
ஆடினரே! – நம்
சுதந்திரச் சுடரில்
புயலினை வீசி
கொடுமையின் கரத்தால்
அனைத்தனரே!

சுயநலம் ஒன்றே
கொள்கையாய் கொண்ட
வல்லமை அரசுகள்
எழுந்ததுவே! ஆவை
ஏவலின் ஆடும்
சிங்கள அரசும்
கைகளை கோர்த்தே
நிமிர்ந்ததுவே!

ஆயுதக் குவியலில்
மலைகளை விஞ்சியே
சிங்கள தேசம்
நிறைந்ததுவே!

தம் ‘இனவெறி’ நாடக
திரையினை நீக்கி
களத்தினில் மனிதத்தை
கொன்றனரே!

மின்னில் முழக்கும்
இடிகள் யாவும்
முள்ளி வாய்க்காலில்
முழங்கியதே! குருதி
சீறியே பாய்ந்து
தமிழ்மண் புதைத்து
இரத்தச் சகதியாய்
மாறியதே!
குண்டுகள் சிதற
நஞ்சுகள் பாய
மக்களோ சிதறியே
பாய்ந்தனரே!
உயிர்வதை ஓங்க
உறவுகள் மாழ
கோரத்தின் காட்சிகள்
ஓங்கியதே!

மரித்திடும் உறவினை
புதைத்திட முடியா
கொடுமையின் நிலையில்
ஓடினரே! – குண்டு
துரத்திடும் அதிர்வின்
வலிமையை தாண்டி
உரத்துடன் மக்கள்
பாய்ந்தனரே!

தாயினை இழந்த
குழந்தையின் வலிகளை
இயற்கையின் வலிகளை
இயற்கையும் காண
மறுத்ததுவே! நம்
பெண்களின் மானம்
காத்திடத் துடித்த
கரங்களை இனவெறி
குதறியதே!

சுற்றி வளைத்துமே
சுதந்திர உணர்வை
அறுத்திட உணர்வை
அறுத்திட சிங்களம்
எகிறியதே! – நம்
உணர்வினைக கருக்கி
சொத்துகள் அழித்து
மக்கள் கொன்று
குவித்தனரே!

இறுதியில் போரில்
மூச்சினை தொடுத்து
எதிரியை தகர்த்திட
எழுந்தனரே – புலி
எகிறியே பாய்ந்து
கொடும் படைதனை!
சிதறிட அடித்ததே
நிமிர்ந்தனரே!

புலியுரம் கண்ட
சிங்கள அரசு
உலகச் சட்டத்தை
மீறினரே!
நச்சுக் குண்டுகள்
கொத்தாய்ப் பொழிந்தே
எமது மறவரை
மாய்த்தனரே!

எண்ணிலடங்கா
அராஜகம் புரிந்து
சிங்கள அரசு
மகிழ்ந்ததுவே! - நம்
மண்ணின் நிலத்தில்
குருதியை இறைத்து
நீச்சலடித்து மகிந்தனரே!

விதைத்த விதைகள்
முளைத்து எழும்
விடியலின் பாதைகள்
திறக்க எழும்
தமிழரின் விதியை
மாற்ற எழும்
தமிழீழ கொடியை
ஏற்ற எழும்!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

-தி.கவியழகன்-
பதிவு இணையத்திற்காக
17-05-2020
No comments