ஊரடங்கை மீறியவருக்கு விசித்திர தீர்ப்பு

ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய நபர் ஒருவருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்டமை, தண்டனைச் சட்டக்கோவை 264ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்து கொண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் அந்த நபர் மீது முன்வைத்து குற்றப்பத்திரம் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. சந்தேக நபர், தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டார்.

இதனால் அவரை குற்றவாளியாக இனங்கண்ட மன்று, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 100 ரூபாய் தண்டப் பணமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக 500 ரூபாய் தண்டப்பணமும் விதித்து உத்தரவிட்டது.

No comments