இராணுவத்துக்கு பாடசாலைகளை கொடுக்க விடோம்!

பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருவது மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களை சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.

எனவே இந்த அச்சமான சூழ்நிலையில் தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில் பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும். நாடுபூராகவும் 43 இலட்சம் மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில் பாடசாலைகளை சூழ உள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வியமைச்சிடம் வடமராட்சி, சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.

''தனிமைப்படுத்தல் நிலையங்களாக பாடசாலைகள் மாற்றப்படாது” எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதன் உண்மைத்தன்மைகளை கல்வியமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்தவேண்டும்.

அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில் பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும் - என்றார்.

No comments