கவனயீர்ப்பில் குதித்த இ.போ.ச ஊழியர்கள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலையில் கடமையாற்றும் அம்பாறை மாவட்ட ஊழியர்கள் சில பிரச்சினைகளை முன்வைத்து கல்முனை பேருந்து டிப்போ முன்பாக இன்று (23) காலை கூடி கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக குறித்த ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட 28 பேர் மட்டக்களப்பு போக்குவரத்துச் சாலையில் கடமையாற்றுகின்றோம்.

தற்போதைய சூழ்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வருவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். ஆகவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எங்களுக்கு கல்முனை சாலையில் தற்காலிகமாக கையொப்பமிடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும். அல்லது போக்குவரத்து ஊழியர்களான 28 பேருக்கும் தனியாக போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும்.

மட்டக்களப்புக்கு கடமைக்குச் சென்று இரவு வீட்டுக்கு சென்றுசேரும்வரை உணவு கிடைப்பது பெரும் சிரமாக உள்ளதுடன் கடைகள் மூடிக் காணப்படுகின்றன என தெரிவித்ததுடன், இந்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments