வீடுடைத்து திருடிய பெண் பல மாதங்களின் பின் கைது!

வீடு உடைத்து தங்க நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் தேடப்பட்ட சந்தேகநபரான பெண் ஒருவர் நேற்று (20) இரவு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களின் 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய சம்பவம் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் பல மாதங்களின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சங்கானையை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து இரு சோடி காப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காப்புகள் திருநெல்வேலி நகைக்கடை ஒன்றில் அடைவு வைக்கப்பட்ட நிலையிலேயே பொலிஸாரால் கன்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments