யாழிலும் ஊரடங்கு நீக்கம்:தேர்தல் கைங்கரியமா?
கோத்தபாய அரசு தேர்தலிற்கு தயாராகி வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஊரடங்கு விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 26 நாட்களின் பின்னராக யாழிலும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் திங்கள் தேர்தல் ஆணைக்குழு சந்திப்பொன்றை நடத்தவுள்ளதுடன் அன்றைய தினம் முடிவும் அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கேதுவாகவே தொடர்ச்சியான ஊரடங்கு நீக்க அறிவிப்பு வெளியிடப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்றும் நோக்குடன் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியிலும் பொலிஸ் பிரிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்படும் விதம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய கொழும்பு , கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை , அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 20 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினமே மீண்டும் இரவு 8 மணிக்கு மீள பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி , கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொடை , அக்குரணை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த 3 மாவட்டங்களினதும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் , பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம் , மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கல்கிசை, தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் – மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் களுத்தறை மாவட்டத்தின் பண்டாரகம, பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
Post a Comment