கொரோனா - கேரளா வென்றது? தமிழகம் ஏன் தடுமாறுகிறது? - அருள் முருகன்


இரண்டு சம அளவிலான வேறு வேறு மாநிலங்கள். அனைத்து வகையான வளர்ச்சி குறியீடுகளிலும் கிட்டத்தட்ட முன்னும் பின்னும் இருக்கும் மாநிலங்கள்.

மருத்துவத் துறையின் வளர்ச்சியில் கேரளாவை விட முன்னணியில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்திய அளவில் மருத்துவர்கள் அதிகமுள்ள உள்ள மாநிலமும் தமிழ்நாடு. சுகாதார துறை மிகவும் சிறப்பாக செயல்படுவதில் இந்திய அளவில் முதலிடம் தமிழகத்துக்கு.


இந்தியாவின் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட இடம் கேரளா. அதிகப்படியான வெளிநாட்டினர் உள்ளே வருவதற்கு வாய்ப்புள்ள சுற்றுலாத்துறையை வருமானத்திற்கு நம்பிய மாநிலம் கேரளா. தமிழகத்தை ஒப்பிடும் பொழுது தொழிற்சாலை வளர்ச்சி குறைவாக உள்ள மாநிலம். தற்பொழுது நடைபெறும் மாநில அரசு, மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு இல்லாத மாநிலம்.

இவ்வளவு நேர்மறையான வாய்ப்புகளைக் கொண்ட தமிழகம், கொரானாவை கட்டுப்படுத்துவதில் எங்கே கோட்டை விட்டது. ஆனால் மறுபுறம் இவ்வளவு எதிர்மறையான சூழலுக்கு பிறகும் இன்றைய நிலையில் இந்திய அளவில் கேரளா, கொரானாவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

தமிழக டிவி சேனல்களின் செய்திகளை கவனிக்கும் போது, தமிழகம் சிறப்பாகவே செயல்படுவது போன்ற நிலை உள்ளது. எடுத்துவரும் நடவடிக்கைகளும் நாம் இதுவரை கண்டிராத நடவடிக்கைகள் என்பதால், பெரும்பாலோனோரால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு அரசு இதைவிட சிறப்பாக எவ்வாறு செயல்பட்டு விட முடியும் என்பதே பலரின் கேள்விக்குறியாக உள்ளது?

இதுபோன்ற சூழலில் அரசின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்ய வேண்டியது அவசியம். ஆனால் எதனோடு ஒப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

நான் நேற்றைவிட இன்று செயல் சிறப்பாக செயல்படுகின்றன என்று, என்னுடைய நேற்றைய செயலோடு ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது.

அதுபோல நாங்கள் இவ்வளவு செய்துள்ளோம் அவ்வளவு செய்துள்ளோம் என்று நம்முடைய எண்ணிக்கையின் வளர்ச்சியை மட்டுமே ஒப்பீடு செய்வதும் சரியாக இருக்காது.

தமிழக அரசு ஊடகங்களுக்கு வழங்கும் தகவல்கள் இது சார்ந்து மட்டுமே இருப்பதால், பொதுமக்களின் எண்ணமும் அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றே இருக்கிறது.

நாம் நம்மைப் போன்றே சூழலில் இருக்கும் ஒரு மாநிலம் அல்லது ஒரு நாடு எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை ஒப்பிடுவதே அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய ஏற்றதாக இருக்கும்.

இதனடிப்படையில், தமிழகத்தை கேரளவோடு ஒப்பிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Corona கட்டுப்படுத்துவதில், அரசின் செயல்பாடுகள், அடிப்படை கட்டமைப்புகள், மக்கள் நடைமுறைகள், அரசின் முடிவெடுக்கும் வேகம் மற்றும் திறன் போன்றவற்றைக் கொண்டு இரு மாநிலங்களையும் ஒப்பிடலாம்.

1. பரிசோதனைகள்/ இலட்சம் மக்கள் தொகை - தமிழ்நாடு - 190 பேர்/ இலட்சம் மக்கள்
கேரளா - 450 பேர் / இலட்சம் மக்கள்
தமிழகத்தில் முதல் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் இன்று வரை நாம் செய்யும் பரிசோதனைகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

2. அடிப்படை கட்டமைப்புகள் - கேரளாவை விட தமிழகத்தில் மருத்துவ அடிப்படை கட்டமைப்புகள் அதிகம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒன்று உள்ளது.

3. நிர்வாகக் கட்டமைப்புகள் - கேரளாவில் உள்ளாட்சி அமைப்பானது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் போன்றோர் அரசு சம்பளம் பெறுகின்றனர். ஒவ்வொரு 500 முதல் 1000 பேருக்கு, அந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு வார்டு மெம்பர் இருக்கும் சூழலில் அவரால் கீழ்மட்ட மக்களுக்கு எளிதாக விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முடிகிறது. மருத்துவர்களையும் அரசு அதிகாரிகளையும் தாண்டி, இவர்களால் மட்டுமே மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற இயலும். தமிழகத்தில் இதுபோன்ற கட்டமைப்பு சிதைக்கப்பட்டு விட்டது. நகர மாநகராட்சிகளில் உள்ளாட்சி என்ற அமைப்பே இப்பொழுது இல்லை. பெரும்பாலான கிராமங்களில் இருக்கும் அமைப்புகள் கூட  நிதி பற்றாக்குறையால் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. அரசு அதிகாரிகளை மட்டுமே கொண்டு, களப் பணி ஆற்றுவது என்பது அடிமட்ட அளவில் மிகவும் கடினமான செயல்.

4. முடிவெடுக்கும் வேகம் - இதுபோன்ற நோய்த்தொற்று காலத்தில் விவேகத்தை விட வேகமே அவசியமாகிறது. கேரளாவில் முடிவு எடுக்கும் உரிமை பரவலாக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. முடிவுகள் வேகமாக எடுக்கப்பட்டன. தமிழகத்திலோ மையமாக்கல் அடிப்படையில், பெரும்பாலான முடிவுகளுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒவ்வொரு மணி நேர கால தாமதமும், பரவலை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது.

நகரமயமாக்கல் கேரளாவை விட தமிழகத்தில் அதிகம். புலம்பெயர் மக்களும் கேரளாவில் குறைவு. கேரளாவைவிட வேகமாக செயல்படவேண்டிய தருணத்தில் தடுமாறி கொண்டிருக்கிறோம்.

தமிழகம் இப்போது உள்ள நிலையில், coronaவை பின்தொடர்ந்தே முடிவெடுத்து சென்று கொண்டிருக்கிறது.கேரளாவோ, corona வுக்கு முன்னால் நின்று தடுத்து கொண்டுள்ளது.

22 மாவட்டங்களை சிவப்பு குறியீட்டில் வைத்து கொண்டு, தொழில்துறை வளர்ச்சியை எண்ணிப் பார்ப்பது கூட கடினம். இந்த நோயினை தடுக்க தவறும் பட்சத்தில், அடுக்கி வைத்த சீட்டுக்கட்டு போல, ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து துறைகளும் அழிவடையும்.

அரசின் செயல்பாடுகளுக்கு இன்றைய சூழலில் நமக்கு முன்னுதாரணம் கேரளா, தைவான், தென் கொரியா போன்றவைகள்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், மகாராஷ்டிரா போன்றவற்றோடு ஒப்பிட்டு சந்தோசப்பட வேண்டிய நேரம் அல்ல இது.

தமிழக அரசின் முடிவெடுக்கும் விதமும், திறனும், வேகமும் அதகரிக்க வேண்டிய நேரமிது.

No comments