காத்தான்குடியில் பயம் வேண்டாம்:வைத்தியர்கள்


கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள காத்தான் குடி வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்
விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள சுகாதாரம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களும் அவற்றுக்கான பதில்களும்:
1. Covid -19 (கொரோனா) வைரஸ் காற்றின் மூலம் பரவலடைந்து சுற்றுச்சூழலில் வாழும் குடும்பங்கள் தொற்றடையும் அபாயம் உள்ளதா ?
2. பழுதடைந்த கழிவு நீர் சுத்திக்கரிப்பு மற்றும் வெளியகற்றும் பொறிமுறையால் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதா ?
3. சேதமடைந்துள்ள எரியூட்டும் இயந்திரம் (Incinerator) மூலம் அல்லது அதனூடாக வெளியேறும் புகை மூலம் சூழலுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதா ?
4. காத்தான்குடி தள வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களால் சமூகத்தில் Covid -19 தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதா?
போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமையை பரவலாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மேற்குறித்த விடயம் தொடர்பாக காத்தான்குடி வைத்தியர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் Covid -19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளுக்கு பொறுப்பாகவுள்ள நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் Dr. வைதேகி பிரான்சிஸ் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டன .
*விடயம் 1*
இந்த நோய் தொற்றுக்குள்ளான ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு சுவாசித்த துணிக்கைகள் மூலம் தும்மல், இருமல், சளி மற்றும் நேரடி தொடுகையின் மூலம் பரவக்கூடியது. இந்த நோய்க்கிருமியின் அளவு( molecular weight) ஓரளவு பெரியதாகையால் நோயாளியிடமிருந்து இரண்டு மீற்றருக்கு அப்பால் பரவும் வாய்ப்பு மிக குறைவு. இதன் காரணமாகத்தான் இருவருக்குமிடையே குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியை பேணிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆகவே வைத்தியசாலைக்கு அண்மையில் வாழக்கூடிய மக்களும் கூட அனாவசியமாக அச்சப்படத்தேவையில்லை. எனவே தள வைத்தியைசாலையை சூழவுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு காற்றின் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பு இல்லை .
*விடயம் -2*
தள வைத்தியசாலையில் கழிவுகள் சுத்திகரிக்கப்படும் பொறிமுறை தற்போது பழுதடைந்திருந்தாலும் இந்த வைரஸ் இனது தொற்றும் இயல்புகள் மற்றும் வெளிச் சூழலில் நீண்ட நேரம் வாழும் திறன் இன்மை காரணமாக நேரடியாக சமூகத்திற்கு தொற்றும் வாய்ப்பு இல்லை. மேலும் சுத்திகரிக்கும் பொறிமுறை எமதூரின் பலரது அயராத முயற்சிகளால் சீராக்கப்படுவதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அத்தோடு Covid-19 தொற்றுள்ள நோயாளிகளின் கழிவுகள் குளோரினேற்றம் மூலம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியினுள் செலுத்தப்படுகிறது. அத்தோடு இவ்வைரசானது கழிவு நீரினால் பரவாது என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டடுள்ளது.
*விடயம்-3*
Covid-19 தொற்றுக்குள்ளானோரின் மருத்துவக்கழிவுகள் எரியூட்டப்பட்டே அழிக்கப்படுகின்றன. எமது தள வைத்தியசாலையில் எரியூட்டும் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் இத்திண்மக்கழிவுகள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டே அழிக்கப்படும். மேலும் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகளை அகற்ற மூடிய பொறிமுறை சாதாரணமாக காணப்படும். இதனால் இந்த வகையான தேவையற்ற அச்சத்தை தவிர்ப்போம். மேலும் நுளம்பு , கொசு போன்ற நோய்க்காவிகளாலும் நாய் பூனை போன்ற விலங்குகளாலும் தொற்றும் அபாயம் இல்லை.
வைத்தியசாலையிலுள்ள எரியூட்டும் இயந்திரம் சீர் செய்யப்பட்டு இயங்க வைக்கப்பட்டாலும் இதனால் வெளியேற்றப்படும் புகையால் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை.
*விடயம்-4*
அடையாளப்படுத்தப்பட்ட தொற்றுக்குள்ளானவர்களை அல்லது நோயாளர்களையே தள வைத்தியசாலை ஊழியர்கள் கையாளவுள்ளனர். ஆகவே ஊழியர்களுக்கான முழுமையான பாதுகாப்பு ஆடைகள் முகக்கவசங்கள் என்பன சர்வதேச நியமங்களுடன் போதியளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நோயாளர்களும் மருத்துவ/தாதிய உத்தியோகத்தர்களும் வீடியோ தொடர்பாடல் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்த்துவதனால் நோயாளர்களுக்கும், வைத்திய ஊழியர்களுக்குமான நேரடித்தொடர்பு மிக அரிதாகவே இடம்பெறும். அத்தோடு ஒவ்வொரு தடவையும் பணி நிறைவுறும் போது ஊழியர்கள் குளித்து சுத்தமாகியதன் பின்னரே வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதனால் வைத்தியசாலை ஊழியர்களின் மூலம் சமூகத்திற்கு வைரஸ் பரவும் வாய்ப்பு மிக மிக குறைவாகும். அத்தோடு இதுவரை IDH வைத்தியசாலையில் 200 க்கும் அதிகமான Covid-19 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ள போதிலும் எந்தவொரு சுகாதார ஊழியரும் இதுவரை தொற்றுக்குள்ளாகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எமது பிரதேச வைத்தியசாலை இந்நோயாளர்களை பராமரிக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதை விவாதத்துக்கு உட்படுத்தாமல் இக்கடினமான காலத்தில் நாட்டிற்கு சேவையாற்றக் கிடைத்த சந்தர்ப்பமாக கருதி நடந்துகொள்ளுமாறும், மேலும் இந்த நோய் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள பின்வரும் முறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
1.கைகளை சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவுதல்
2.ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணிக்கொள்ளல்
3.மாஸ்க்கை ஒழுங்கான முறையில் பாவித்தல்
4.தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் வீட்டை விட்டு வெளியாகுதல்
5.அரசாங்கத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை ஒரு சமூக கடமையாக கருதி பின்பற்றுதல்.

No comments