மன்னார் தாராபுரம் முடக்கம்?


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு – தாராபுரம் கிராமம் இன்று (08) அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
கடந்த மாதம் 18ம் திகதி மன்னார் – தாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்திய சாலைக்குச் செல்லவில்லை. அவர் கடந்த 15ம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்குபின் 18ம் திகதி மன்னார் தாராபுரம் சென்று மரணச் சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் 19ம் திகதி புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணச்சடங்கில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த அதிகளவானவர்ககள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணத்தினால் குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை.
இந்நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் முடக்கியுள்ளோம். மக்கள் பயப்படவோ அல்லது பதற்றப்படவோ தேவை இல்லை என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments