சண்டித்தனமும் சர்வாதிகாரமும் மாற்று அணியின் தேவையை அவசியமாக்கி வருகிறது! பனங்காட்டான்

சம்பந்தனின் உள்வீட்டுச் சண்டித்தனமும், சுமந்திரனின் சுத்துமாத்துச் சர்வாதிகாரமும் கூட்டமைப்பை மக்கள் மத்தியில் மதிப்பிறக்க
வைத்துள்ளது. இதனால் மாற்று அணியொன்றின் அவசியம் மக்களால் ஆழமாக வேண்டப்படுகிறது. அது, கொள்கை அடிப்படையிலா, பதவி அடிப்படையிலா, தலைமைத் தெரிவு அடிப்படையிலா என்று விளங்காத நிலையே இப்போது காணப்படுகிறது.

இந்த ஆண்டின் மாபெரும் உயிராயுதமாக ஷகொரொனா| என்ற வைரஸ் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை இதுவரை காவு கொண்டுள்ளது.

சீனாவின் வுகன் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த உயிர்கொல்லியால் லட்சோபலட்சம் மக்கள் உலகின் பல நாடுகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் ஷநாளை என்னவோ| என்று தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

பல நாடுகளின் பிரதமர்கள், தலைவர்கள், அமைச்சர்கள் தங்களைத் தனிமைப்படுத்தி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாட்டவர் எவரும் அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாதென்று ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இவர் எதனைச் செய்தாலும் வித்தியாசமாகச் செய்பவர். ஒருவகையில் இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களைப் போன்றவர் ட்ரம்ப்.

கொரொனா அபாயம் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. தினமும் பலர் அடையாளம் காணப்பட்டு தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஒருகாலத்தில் அங்கொட என்று சொன்னால் அங்குள்ள மனநோய் (இதனை விசர் ஆஸ்பத்திரி என்று பொதுவாகச் சொல்வர்) மருத்துவமனைதான் ஞாபகம் வரும். 1960 - 70களில் அரியாலையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அருளம்பலம் அவர்களின் தலைமையில் இயங்கியது இந்த மருத்துவமனை.

இப்போது கொரொனா சந்தேக ஆட்களை அங்கொட மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இன்னொரு தொகையினர் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி கோதபாயவின் தனிப்பட்ட தெரிவே மட்டக்களப்பு மருத்துமனையென ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் அனுமதிக்கப்பட்ட சிலர் திடீரென அங்கொடவுக்கு மாற்றப்பட்டதையறிந்த கோதபாய இதுபற்றி ராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிடம் வினவியபோது, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்படி இந்த மாற்றம் இடம்பெற்றதாக கூறியுள்ளார்.

இந்த பதிலில் சினமடைந்த கோதபாய, 'அவர் (மகிந்த) இப்போதும் தாமே ஜனாதிபதியென நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்" என்று கூறி நையாண்டி பண்ணியதோடு, தாமே ஜனாதிபதி - தமது உத்தரவின்படியே செயற்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

கொரொனா காய்ச்சல் அண்ணன் தம்பிக்கிடையிலிருந்த காய்ச்சலை இப்போது அம்பலப்படுத்தியுள்ளது. இது எதிர்பார்த்ததும்கூட.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தளவில் கொரொனா அச்சமில்லையென்று யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் தனியார் வகுப்புகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளோடு யாழ். மாவட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. குடாநாட்டில் பெருமளவு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வணிக நிலையங்களுக்குப் படையெடுத்துள்ளனர்.

ஒருபுறம் கொரொனா எங்கும் தலைவிரித்தாட, அதற்கு நிகராக இலங்கையின் தேர்தல் களம் ததிகிண தோம் என ஆட்டம் போடுகிறது. கொரொனா காரணத்தால் ஏப்ரல் 25 தேர்தல் பின்போடப்படலாமென்ற வதந்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

எதுவானாலும் தேர்தல் திருவிழா என்பது வேட்பாளர் நியமனத்துக்கு முன்னரே பெரும் களேபரமாகியுள்ளது. இறந்துபோன மூன்று முன்னாள் ஜனாதிபதிகளைவிட, உயிருடன் இருக்கும் மிகுதி மூவரில் சந்திரிகா குமாரதுங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் இப்போது செல்லாக்காசாகி விட்டார்கள்.

மற்றொருவரான மகிந்த மட்டும் ஆடுகளத்தில் நிற்கிறார். இவரது எதிர்காலம் கோதபாயவின் காலடிகளில்தான் தங்கியுள்ளது. முன்னர் ஒருதடவை இப்பந்தியில் குறிப்பிட்டதுபோல சிலவேளை கோதபாயவின் இந்த ஆட்சிக்காலத்தில் மகிந்த கரையொதுக்கப்பட்டு விடலாம்.

ஐக்கிய தேசிய கட்சியென்பது ஐக்கியம் இல்லாத கட்சியாக மாறி ரணில் அணி, சஜித் அணியென இரண்டாகிவிட்டன. கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலின்போது கருவான பிளவு இப்போது உருவமெடுத்து ஒரு வீட்டுக்குள் யானையா அன்னமா என வேறுபட்டு நிற்கின்றன. நியமனப் பத்திர தாக்கல் இறுதி நாளான 19ம் திகதிக்குப் பின்னர் இவை பற்றி விசாலமாக அலசலாம்.

எல்லாவற்றிலும் அதிமுக்கியமாக தமிழர் தரப்பு அரசியல் முருங்கை மரமேறி நிற்கிறது. வடக்கில் மூன்று பிரதான அணிகளுடன் ஈ.பி.டி.பி., ஐக்கிய தேசிய கட்சியும் சில சுயேட்சைகளும் களம் இறங்குகின்றன. நியமன முதல் நாளான பன்னிரண்டாம் திகதியன்று இரு தரப்பினர் வேட்பு மனுக்களை யாழ். செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஒன்று, ஒரு சுயேட்சைக் குழு, அடுத்தது ஜனசெத பெரமுன என்ற சிங்களக் கட்சி.

நாவற்குழியில் பலாத்காரமாக அமர்த்தப்பட்ட சிங்கள குடியேற்றத்தைச் சேர்ந்தவர்கள் புடைசூழ பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்னும் எத்தனை சிங்களக் குழுக்கள் குடாநாட்டில் தரையிறங்குமோ தெரியாது.

கிழக்கின் நிலைமையும்கூட இவ்வாறுதான். தமிழர் அணிகளைவிட முஸ்லிம், சிங்கள அணிகள் இங்கு மோதவுள்ளன. ராவுப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசும், ரசீத் பதியுதீனின் மக்கள் கட்சியும் ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிட முன்வந்திருப்பதாகவும் ஒரு தகவல். பிரதான சிங்களக் கட்சிகளும் இங்கு நிச்சயமாகப் போட்டியிடும்.

தமிழர்களின் தலைமை என்று கூறப்படும் கூட்டமைப்பு ஓரளவுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துள்ளது. ஆனாலும் 19ம் திகதியன்றே பெயர் பட்டியலை வெளியிடுமாம்.

வேட்பாளர் தெரிவில் பிரச்சனை கூட்டமைப்புக்குத்தான். யாழ். மாவட்டத்தில் ஏற்கனவே எம்.பி.க்களாகவிருந்த மாவை சேனாதிராஜா, சிறிதரன், சரவணபவன், சுமந்திரன், சித்தார்த்தன் ஆகிய ஐவரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு பேர் தெரிவாக வேண்டிய இம்மாவட்டத்துக்கு மொத்தம் பத்துப் பேரை கூட்டமைப்பு நியமிக்க வேண்டும்.

இம்முறைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திலிருந்து குறிப்பிட்டளவு பெண்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து ஒரு விடயத்தை மறைபொருளாகக் கொண்டதென சொல்லப்படுகிறது. இவர் கூறியுள்ளதுபோன்று தேர்தல் முடிவு வருமானால், கூட்டமைப்பின் மூன்று முன்னாள் எம்.பி.க்கள் தோற்கடிக்கப்பட வேண்டுமென சுமந்திரன் விரும்புகிறார் என்பது தெரிகிறது. அப்படியானால் அந்த மூவர் யார்?

இது மட்டுமன்றி அண்மைக்காலங்களில் சம்பந்தனும் சுமந்திரனும் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்கள் கசிந்து தமிழரசுக் கட்சியினரது எதிர்காலத்தை மட்டுமன்றி கூட்டமைப்பினரையும் அச்சுறுத்துவதாக அமைகின்றது.

திருமலை மாவட்டத்தில் தாம் இம்முறையும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள சம்பந்தன் (ஆமாம்! அவர் ஓய்வு பெறவில்லை), கனடாவிலிருந்து இறக்குமதியாகியுள்ளவரை வேட்பாளர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இடவேண்டுமெனவும் கட்டளையிட்டுள்ளார். அந்தக் கனடா பிரமுகர் தேர்தலில் தோல்வியடைந்தால் அவரை தேசியப் பட்டியலில் முதலாவது எம்.பியாக்க வேண்டுமெனவும் பிறப்பித்துள்ள சண்டித்தன உத்தரவு கூட்டமைப்புக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து கொண்டு வரப்படவிருந்த சட்டத்தரணி தவராசாவை தேசியப் பட்டியலிலிருந்து ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னுமொரு சட்டத்தரணி கூட்டமைப்புக்குள் எம்.பியாகக் கூடாது என்பதில் சுமந்திரனுக்கு விருப்பம் இருப்பதால் தவராசாவை ஓரங்கட்டுவது இலகுவாக உள்ளது.

கடந்த 9ம் திகதி சுன்னாகத்தில் இடம்பெற்ற தேர்தலையொட்டிய கேள்வி - பதில் கூட்டம் உள்வீட்டுச் சமாசாரம் பலவற்றை சந்திக்குக் கொண்டுவந்துள்ளது.

1960ம் ஆண்டுகால தேர்தல்களின்போது தமிழரசுக் கட்சி இவ்வாறான கேள்வி பதில் கூட்டங்களை நடத்துவது வழக்கம். அடலேறு எனப் பெயர்பெற்ற அட்வகேட் ஆலாலசுந்தரம் (பின்னர் சில காலம் எம்.பியாக இருந்தவர்) மட்டும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்றது சுன்னாகம் கூட்டம்.

இக்கூட்டத்தில் தாறுமாறாக கேள்விகள் கேட்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் விசிறிய அம்புகள் தமிழரசுப் பிரமுகர்களை உலுப்பிவிட்டிருக்கிறது. இவரது முக்கிய பாய்ச்சல்கள் மாவை சேனாதிராஜாவை நோக்கியவை. பதிலளிக்க அவர் அங்கிருக்கவில்லை.

வித்தியாதரன் முன்வைத்த கேள்விகளுக்கும் சவால்களுக்கும் சுமந்திரன் சரியாகப் பதிலளிக்கவில்லையென்பது கட்சியின் முக்கிய புள்ளிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் உள்வீட்டு விடயங்களை பொதுமேடையில் விமர்சித்திருக்கக் கூடாது என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழரசுக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவரான சி.வி.கே.சிவஞானம்.

ஊடகவியலாளரை கட்சிக்காரராகப் பார்க்கக்கூடாதென்பதையும், எதனையும் சுடச்சுட கேள்வியாகக் கேட்டே பழக்கப்பட்ட ஊடகவியலாளர் இப்படித்தான் கேள்விக்கணைகளைத் தொடுப்பார் என்பதையும் சி.வி.கே.சிவஞானம் மறந்துவிட்டார்.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவைத் தலைவராக இருந்து கொண்டு ஆளுனரிடம் கையளித்த சி.வி.கே.சிவஞானம், அண்மையில் அதனைத் தவறென நேரடியாக ஒப்புக் கொள்ளாது தம்மை சூழ்நிலையின் கைதிபோல குறிப்பிட்டிருந்தார்.

இப்போதும் அதுதான்! மாவையர் மீதிருக்கும் விசுவாசத்தால் அவரைப் பிணையெடுக்க முன்வந்திருக்கிறார் போலும். மற்றவர்களைப் பிணையெடுத்தே பிரச்சனையில் அகப்பட்ட அனுபவம் இவருக்கு நிறையவே உண்டு.

இது போகட்டும். கூட்டமைப்பின் பட்டியலில் கிழக்கிலிருந்து ஒரு பெண்ணையும், யாழ்ப்பாணத்துக்கு இன்னொரு பெண்ணையும் தம்விருப்பப்படி சேர்க்க முனைந்து மூக்குடைபட்டு நிற்கிறார் சுமந்திரன். விடுதலைப் புலிகளுக்கு ஒரு கருணா போல தமிழரசுக் கட்சிக்கு ஒரு சுமந்திரனென்று தமிழரசுக் கட்சியின் மாதர் அணி அறிக்கை வாயிலாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

யார் என்ன சொன்னாலும், நானே பேச்சாளன் - நானே மந்திரி - நானே ஆலோசகன் - நானே எதிர்காலத் தலைவன் - நானே எல்லாம் என்ற மமதையில் சுமந்திரன் பயணிக்கிறார்.

சம்பந்தனின் உள்வீட்டுச் சண்டித்தனமும், சுமந்திரனின் சுத்துமாத்துச் சர்வாதிகாரமும் கூட்டமைப்பை மக்கள் மத்தியில் மதிப்பிறக்க வைத்துள்ளது.

இதனால் மாற்று அணியொன்றின் அவசியம் மக்களால் ஆழமாக வேண்டப்படுகிறது. அது, கொள்கை அடிப்படையிலா, பதவி அடிப்படையிலா, தலைமைத் தெரிவு அடிப்படையிலா என்று விளங்காத நிலையே இப்போது காணப்படுகிறது.

அடுத்த வாரம் இதுபற்றி விரிவாக நோக்குவோம்.

No comments