சேறடிப்போமே: தேர்தல் சேறடிப்போமே?


தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னராகவே கட்சி பிரச்சாரங்கள் சேறுபூசுதல்கள் தமிழர் தாயகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கொள்கையிலிருந்து மாறிவிட்டனர். இவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். சி.வி.விக்னேஸ்வரன் பச்சை பச்சையாகப் பொய் சொல்கின்றார். அவர் நன்றியே இல்லாதவர். அவரை நாங்கள் துரத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனக்கு  தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமையால் வெளியேறினார்.தேர்தல் முடிந்தவுடன் நாம் தேசிய பட்டியல் ஆசனம் வழங்குவது தொடர்பாக கூடி பரிசீலனை செய்தோம். அப்போது எமது கட்சியில் போட்டியிட்ட அருந்தவபாலன் 14 ஆயிரம் வாக்குகள் வரையில் பெற்றிருந்தார். எனினும் சுரேஸ் பிரேமச் சந்திரனுக்கு மிகவும் குறைவான விருப்பு வாக்குகளே கிடைத்தது. இவ்வாறான நிலையில் நாம் எவ்வாறு சுரேஷ் பிரேமச் சந்திரனுக்கு ஆசனம் வழங்குவது? இப்படி இவர்கள் எல்லோரும் சலுகைகளுக்காகக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்கள் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள சுரேஸ்பிறேமச்சந்திரன் எங்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது சுயலாபங்களுக்காகவோ நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள தேசியப்பட்டியலை நாங்கள் கேட்டதாகவும் அது கொடுக்காத காரணத்தினால் வெளியேறியதாகவும், கூறுகின்ற விடயம் மோசமான ஒரு பிழையான செய்தி என்பதையும் நான் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். 2015ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு கட்சிகளும் ஒன்றாக இணைந்து போட்டிருந்தது. அதில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

நான்கு கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டு அதன் காரணமாகவே அந்த வாக்குகள் கணிசமான அளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அது தமிழரசுக்கட்சிகுரிய வாக்குகள் அல்ல. எங்களுடைய கூட்டு முயற்சியால் தான் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அடிப்படையில் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள், எங்களுக்கு கிடைத்த பொழுது அந்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒன்று தமிழரசுக் கட்சிக்கும், மற்றைய ஆசனத்தை மூன்று கட்சிகளுக்கும் ஒரு கால வரையறையை வகுத்து செயற்படுத்தி எங்களுக்கும் அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் நிறுத்தப்பட்டு இருந்தது என விளக்கமளித்துள்ளார். 

No comments