சகல மதங்களிற்கும் சம இடம்:தீர்ந்தது கூட்டணி குழப்பம்



தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையில் எழுந்து சர்சைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.


செவ்வாக்கிழமை குறித்த கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையில் நடந்த அவசர கலந்துரையாடலிலேயே மேற்படி சர்சைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் ஒருவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவம் பெறும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் எந்த கட்சி சார்பில் கிறிஸ்தவ மதம் சார்ந்த வேட்பாளரை நிறுத்துவது என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக சில வாக்குவாரதங்கள் நடைபெற்றிருந்தன.

இந்த வாக்குவாதங்கள் முற்றுப்பெறாமல் தொடர்ந்த நிலையில் கிறிஸ்தவ வேட்பாளர் நியமனம் தொர்பில் குறித்த கூட்டணிக்குக் சர்சையும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்.கோவில் வீதியில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாக்கிழமை மாலை அவசர கூட்டம் கூட்டப்பட்டது.

இக் கூட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கசேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்த குறித்த கூட்டத்தின் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் சகல கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.
இதன்படி மிக விரையில் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள கிறிஸ்தவ மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் யார் என்பது அறிவிப்பதாகவும் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை குறித்த கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளின் பிரமுகர்கள் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தனர்.

மேலும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையில் எந்தவிதமான பிளவுகளும் இல்லை. ஒருமித்தே செயற்படுகின்றோம்.

கிறிஸ்தவ வேட்பாளர் நியமனம் தொடர்பில் சில ஊடகங்கள் வேண்டுமேன்றே விக்னேஸ்வரன் மீது விசம பிரச்சாரங்களை முன்வைக்கின்றது. கிறிஸ்தவ வேட்பாளர் நியமனம் தொடர்பில் விக்னேஸ்வரன் ஏற்கனவே ஆயர்களுடன் பேசியுள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னரே தமிழ் தேசிய மக்கள் கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கிறிஸ்தவ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் உத்தியோக பூர்வமாக தெரியப்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு மேலும் தகவல் வெளியிட்டனர்.

No comments