தெளிந்தோம் நாம்; ரணிலால் ஏமாந்து நெளிந்தோம்

ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஏமாற்றி விட்டார். அதுவரை நாம் ஐ.தே.கவை நம்பியது உண்மைதான் என்று தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (10) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஏமாற்றி விட்டார் என்று எமக்கு தெரிய வந்துவிட்டது. அதுவரை நாம் ஐ.தே.கவை நம்பியது உண்மைதான். அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

2018 ஒக்டோபரில் அரசியலமைப்பு அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு குழப்பம் வந்த போது இதற்கு நான் பொறுப்பில்லை சபையே பொறுப்பு என அவர் கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றி விட்டார் என நாம் அறிந்து கொண்டோம். எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் மஹிந்த குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வந்து விடக் கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம்.

இனிவரும் காலங்களில் ஐ.தே.கவுக்கு ஆதரவான நாடாளுமனற பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள். நாம் பட்டு தெளிந்து விட்டோம். நாம் அனைவருடனும் பேசுவோம். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை. இனி நிபந்தனையுடன் இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ காணாமல் போனவர்களை சுட்டுக் கொல்லவில்லை என்று கூறியுள்ளார். நாம் காணாமல் போனவர்களை சுட்டுக் கொன்றீர்கள் என சொல்லவில்லை. நாம் இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவுகளினால் கையளிக்கப்படடவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றே கோரி வருகின்றோம். எனவே அதனை வெளிப்படுத்த வேண்டும் - என்றார்.

No comments