தமிழர்களை கொன்று மன்னிப்பு பெறலாம்

இலங்கையில் தமிழர்களைக் கொன்றால் பொதுமன்னிப்புக் கிடைக்கும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

படுகொலை குற்றவாளியான மரண தண்டனை கைதி சுனிலுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்,

2000ம் ஆண்டில் சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க மூன்று சிறுவர்களுட்பட்ட எட்டுத் தமிழர்களை சுட்டும் வெட்டியும் கொலை செய்தான். குறித்த அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பொழுது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இராணுவ அதிகாரி சுனிலின் மரண தண்டனையை இரத்துச் செய்து பொதுமன்னிப்பில் அந்தப் போர்க் குற்றவாளியை விடுதலை செய்திருக்கிறார்.

இவ்வாறான பல பொது மன்னிப்புக்கள் பௌத்த குருமாருக்கு, போர்க் குற்றவாளிகளுக்கு, இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு தண்டணைக்குரிய குற்றங்களைப் புரிந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கியதன் தொடரில் நேற்றுமுன்தினம் கொரோனாவைரஸ் பதட்டம் நிறைந்த காலத்தில் மரண தண்டனைத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமைதான் அதிர்ச்சிதரும் செய்தியாகும்.

தமிழர்களைப் போர்க்காலத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொலைசெய்தால் நீதிமன்ற தீர்ப்புக்களையும் மீறி அப்பால் தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு என்பதும் சட்டத்திற்குமுன் சட்டநீதி மறுக்கப்படுவது என்பதும் அதுவும் தமிழர்களை கொன்றுகுவித்தால் நிச்சயம் பொது மன்னிப்பு இன்றைய ஜனாதிபதியினால் வழங்கப்படும் என்பதும் வழக்கத்திற்கு வந்துவிட்டது.

இராணுவ அதிகாரி சுனிலுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை எதிர்த்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமையாளர்கள் பலத்தகண்டனம் வெளியிட்டுள்ளனர். அரசு கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்புக் கூறலை நிறைவேற்றவில்லை என்பதும் கண்டனத்திற்குரியதெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபயவின் இத்தகைய பொதுமன்னிப்பு தமிழினத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கெதிராக எக்குற்றத்தையும் யாரும் செய்யலாம், இனத்தையே அழித்துவிடலாம் என்ற செய்கைக்கு உத்தரவாதம் கொடுக்கப்படுவதை சர்வதேசம் அனுமதிக்கக் கூடாது.

அதேநேரத்தில் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் போர்காலத்தில் குற்றமிழைத்தார்கள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களை குறிப்பாக இந்து குருவான பிரம்ம ஸ்ரீ சந்திரா ஐயர் ரகுபதிசர்மா அறுபது வயதைத் தாண்டியவர் உட்பட நூற்றுக்கணக்கான தமிழ்க் கைதிகளை அதுவும் கொரோனாவைரஸ் பரவிவரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்ற குரலுக்கு மதிப்பளித்து அரசும் ஜனாதிபதியும் உடன் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோருகின்றோம்.

அத்தோடு இலங்கை அரசு, இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களிலிருந்து வெளியேறி விட்டது என்றுள்ள நிலையில் இலங்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையே மீறி மரண தண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி சுனிலுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து விலகிவிட்ட இலங்கைக்கு எதிராகப் பொருத்தமான சர்வதேச சட்டங்களுக்கு அமைவான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென வற்புறுத்துகின்றோம். - என்றார்.

No comments